"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, December 27, 2008

விஞ்ஞானம் வியக்கும் வேதநெறி

ஆய கலைகள் அறுபத்தினான்கு, அதில் சோதிட சாத்திரம்(வான சாத்திரம்),கணிதம்,சித்த மருத்துவம் என்பன மணிகளாய் பூத்து வேதநெறியை அழகுபடுத்துகின்றன என்றால் மிகையாகாது.மெஞ்ஞானம் என்பது மூலமூர்த்தியாகவும் ஏனைய மருத்துவம்,கணித விஞ்ஞானம்,வான சாத்திரம்,அரசியல் என்ற ஏனையவை பிரகார மூர்த்திகளாகவும் கொண்ட மேன்மைகொள் நெறியே வேதநெறி.இதைத்தான் நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் என்றும் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க என்றும் திருமுறைகள் எடுத்தியம்புகின்றன.

வேதநெறியாயினும் சரி அதன் மூலாதாரமான சைவநெறியாயினும் சரி, இந்த அறுபத்தி நான்கு கலைகளையும் உலகுக்குத் தந்த பெருமையை உடையது எனலாம்.அன்றைய முனிவர்கள்(ஏன் இன்றும் தவத்தினுள் ஆழ்ந்தும் பரதேசிகள் என்ற திருப்பெயர்களோடும் உலாவருகின்றனர்) விஞ்ஞானிகள் என்றால் அது பொருந்தாப் பேச்சு அன்று.

சித்த மருத்துவம், சோதிடம், கணிதம்,இல்லற இன்பவியல் கலை என்று ஏராளமானவற்றுக்கு முன்னால் மேலைதேயம் விழிபிதுங்கி நிற்பது நம்மவர்களில் சிலருக்குப் புரியாது.

சித்த மருத்துவத்துக்கு இணையான மருத்துவம் இல்லவே இல்லை என்பேன். மேலைத்தேய மருத்துவம் வெளியோட்டமாய் பார்க்கும்போது ஆகா ஒகோ என்று இருக்கும். ஆனால் அதனுள் மூழ்கினால் பல மருந்துகள் இந்திய சித்த மருத்துவத்திற்கு பயன்படும் தாவரங்களை அறிந்து அதிலிருந்து உருவாக்கப்பட்டது என்பது மெல்ல மெல்லப் புலப்படும்.மேலைத்தேய மருத்துவத்தில் உள்ள மருந்துகள் யாவுமே உடலில் டோக்சின்(toxin) எனும் பொருளை உருவாக்கி மிகச் சிறிய அளவேனும் பாதகத்தையேனும் உண்டு பண்ணிவிட்டே செல்லுகின்றன. இந்த டோக்சின் பொருட்கள் உடலில் அதிகரிக்க அதிகரிக்க உடலும் இயற்கை நியதிகளுக்கு மாறாக செயற்பட ஆரம்பிக்கின்றது. ஈற்றில் புதிய புதிய நோய்களை ஏற்படுத்துகின்றது. இதய மாற்று சிகிச்சை, ஈரல் மாற்று சிகிச்சை,சிறு நீரக மாற்று சிகிச்சை எல்லாம் மேலைத்தேய மருத்துவ மேன்மைகளாக நினைக்கும் மூடரும் உள்ளர். ஆயுர்வேத வாழ்வியலை மேற்கொள்பவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சைகளுக்கு முகம் கொடுக்கும் துர்பாக்கியம் நிகழ்வதில்லை. ஏன் அறுவை சிகிச்சைகள் எல்லாம் ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் உண்டு என்பது மறக்கப்படக்கூடாதவை.

அன்று எல்லாவகையான உணவுகளும் எல்லாக் காலங்களிலும் பெறமுடியாது. குறித்த உணவு குறித்த பருவத்தில்த்தான் விளையும்.அவை நிறைவான முறையில் சமிபாட்டிற்கு உள்ளாகும் வகையில் உணவு சமிபாட்டுத்தொகுதியும் பருவமாற்றத்திற்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்துகொள்ளும். ஆனால் இன்று உணவுப்புரட்சி என்று எல்லாப் பருவத்திலும் எல்லா உணவும் கிடைக்கும் விந்தையால் உணவு சமிபாட்டுத்தொகுதி ஈற்றில் கெட்டுப்போகின்றது.நோய் வந்து சேருகின்றது. உணவுப்பழக்கமே ஆரோக்கியத்தின் அத்திவாரம் என்பர். ஆதலால்த்தான் சிலசமயங்களில் சித்த மருத்துவத்தில் உணவுக்கட்டுப்பாடு அவசியமாகின்றது
ஜேர்மனியில் பல்லாயிரம் ஏடுகள் உள்ளன என்று வீரகேசரியில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த நினைவு உண்டு. ஜேர்மன்காரர்கள் வெளிநாட்டவர்கள் எல்லோரும் வந்து இந்தியாவில் கொட்டிக்கிடந்த அறிவு வளங்களை எல்லாம் திரட்டிச் சென்றனர். நம்மவர்கள் நாத்தீகம் கதைப்பதிலேயே அறிவை இழந்து தம்மிடம் இருக்கும் வளங்களை மறந்து மேலைதேயத்தை துதிபாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் அன்றும் இருந்தனர். இன்றும் உள்ளனர். என்றும் இருப்பர். திருந்தவே மாட்டார்கள்.
கல்ப சூத்திரம் எனும் நூலில் போதாயனர் பைதகரஸ் தேற்றத்தை என்றோ சொல்லிவிட்டார். நம்மவர்களுக்கு இது தெரியாது.பைதகரஸ் எந்த இந்திய ஏட்டைப் படித்தறிந்து கொண்டாரோ யாரறிவர்!திரிகோண மீதி என்ற சமஸ்கிருதம் Trigonometry என்றும் ஜியோமீதி என்ற சமஸ்கிருதம் Geometry என்றும் ஆனது இவர்களுக்கு புலனாகாது.பாஸ்கராச்சாரியார் என்பவர் எண் கணிதத்தையும்(Arithmetic) வடிவ கணிதத்தையும்(Geometry) லீலாவதி என்ற நூலிலும் இயல் கணிதத்தை பீஜகணிதம் எனும் நூலிலும் விளக்கியிருப்பது எத்தனை பேருக்குத்தான் தெரியும்?அவர் பூச்சியத்திற்கும் எண்ணிலிக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.Permutation and Combination என்று இப்போது அழைக்கப்படும் கணக்குமுறையை "அங்கபாச வ்யவகாரம்" எனும் பெயரில் விளக்கியுள்ளார்.ஏன் பூச்சியத்தையும் ஒன்றில் இருந்து ஒன்பது வரையுள்ள எண்களையும் கண்டுபிடித்தது வேதநெறி மக்களே என்பது யாவரும் அறிந்தது. இவ் எண்கள் இந்து அரேபியா எண்கள் என்று இன்று வழங்கப்படுகின்றன. (ஏனெனில் அரேபியரே வர்த்தகத்திற்கு இலகுவான எண் நடைமுறையாய் இருப்பதுகண்டு பாரில் பரப்பினர் என்பதால்.)

இல்லறத்தின் அத்திவாரமே சேக்கைப்போர்தான் என்பதை உணர்ந்து காமசூத்திரா,திருக்குறளின் காமத்துப்பால் என்று நின்றுவிடாமல் ஆலயங்கள் வரை காமக்கலையை வடித்து சமூகத்தோடு வாழ்ந்த சமய வாழ்வியல் பண்பாடு நமது பண்பாடு என்றுணர்க.

வானத்துக்கோள்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் வேத நெறி மக்களே என்பது வெள்ளிடைமலை. சோதிடத்தை இகழ்பவர்கள் ஒருகணம் சிந்திக்க எளியேன் இங்கு வேண்டுகின்றேன்.அமாவாசை பௌர்ணமிகளில் சிலருக்கு சித்த சுவாதீனம் இல்லாமல் போவது ஏன்?குறித்த நாட்களில் புவியீர்ப்பு மாறுவதால்த்தான் கடல் அலைகளே ஆர்ப்பரிக்கின்றன . பருவ காலங்களே இக்கோள்களின் அசைவின் தாக்கங்களை சுமந்து பூப்பது என்று விஞ்ஞானம் நவில்வதை உணர்க.. எனவே மனித வாழ்க்கையும் நாளும் கோளுடனும் ஒன்றாய் கலந்திருப்பது புலப்படும்.உலகில் பன்னிரண்டு மாதங்களைக் கொண்ட ஆண்டு நடைமுறையைக் கொண்டிருந்தது வேதநெறிப் பண்பாடே.

ஆங்கிலேய ஆண்டில் வெறும் பத்து மாதங்களே இருந்தன.ஜீலியர் சீசரின் நினைவாக ஜீலை என்றும் அகஸ்டஸ் சக்கரவர்த்தியின் நினைவாக ஆகஸ்ட் என்றும் பெயரிட்டனர்.அதற்கு முதல்க்கூட பத்தாவது மாதத்தைக் குறிக்கும் டிசம்பர் தசம்(பத்து) சமஸ்கிருதத்தில் இருந்தே உருவாயிற்று என்றும் நவமி எனும் சமஸ்கிருதத்தில் இருந்தே நவம்பர் என்றும் அதாவது ஒன்பதாவது மாதம் என்றும் அஷ்டம் எனும் சமஸ்கிருதத்தில் இருந்தே எட்டாவது மாதத்தைக் குறிக்கும் அக்டோபர் உருவானது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.ஏன் யேசு பிறந்த திகதியில்க்கூட அவர்களுக்கு குழப்பம். ஈற்றில் டிசம்பர் 25 என்பது கத்தோலிக்க சபை ஒருமனதாக யேசுவின் பிறந்த நாளாய்க் கொண்டாடுவோம் என்று எடுத்துக்கொண்ட முடிவு என்பது பலருக்குத் தெரியாது.தெரிந்தவர்கள் மௌனிகளாய் உள்ளனர். இரசியாவில் யேசு பிறந்ததாக பெப்பிரவரி ஏழைக் கொண்டாடும் ஒரு கிருத்தவப் பிரிவினர் உள்ளனர். இது இப்படியிருக்கையில் வெறும் கற்பனை ஆண்டு முறையல்லாது நமது சோதிடவிஞ்ஞானம் திதி,இலக்கணம்,ராசி,நட்சத்திரம் என்று நாம் பிறந்தபோது அமைந்த வான அமைப்பை ஆதாரமாய்க் கொண்டு நமது பிறந்த நாளை தந்து நிற்கின்றது தெட்டத் தெளிவாகசூரிய சித்தாந்தத்தின்படி உலகம் தோன்றி கி.மு.198,67,71,100 என்று பறைசாற்றுகின்றது.இது விஞ்ஞானம் ஏற்ற காலக்கணிப்பு.ஆனால் பைபிள் வெறும் கி.மு 4004 என்று விஞ்ஞானம் முன் தோற்று நிற்கின்றது. இப்போது சொல்லுங்கள் சோதிடம் என்பது பகட்டுவித்தையா என்ன?
இன்று முறைப்படி சோதிடக்கலையை கற்பவர் குறைவு.அரைகுறை சோதிடர்கள் தவறாகக் கணிக்க, அவர்களிடம் ஏமாந்த அறிவற்ற கூட்டம் சோதிடத்தை இகழத்தான் செய்யும்.

அறிவு வளர வளர நாம் பெற்ற அறிவு முடிவானது இல்லை என்பது புலப்படும்.விஞ்ஞானிகளும் இதை அறிவர். உலமகே போற்றும் விஞ்ஞான மேதை நாத்தீகர்களின் கன்னத்தில் அறைவதுபோல் பின்வறுமாறு சொல்லுகின்றார்."அறிவு அறிவு என்று பேசுகின்றோம்.அப்படிப் பேசும்போதெல்லாம் நாம் எவ்வளவு சிறுமை உடையவர்கள் என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகின்றது.அந்த நேரத்தில் வெட்கம் அடைந்து தலை குனிகின்றேன். காரணம் இயற்கையின் இயங்கும் தன்மை விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகின்றது. இந்தவிதி முறைகள் எல்லா நேரத்திற்கும் எல்லா இடத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு சிலவற்றைத்தான் தெரிந்து கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வு மனதை உறுத்துகிறது.அதற்கு அப்பால், நாம் அறிந்திராத ஒரு சக்தி எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி முறைப்படி நடத்திச் செல்கின்றது. இது உணர்வுக்கும் அப்பால் உள்ள உண்மை.அந்த ஒரு மாபெரும் சக்தியை கற்பனை செய்து பார்க்கும் போது என்னை அறியாமலேயே நான் சமயத்துள் நிற்கின்றேன்!"யார் அந்த விஞ்ஞான மேதையா? ஜன்ஸ்டீன் என்றால் நம்புவீர்களா என்ன நாத்தீகர்களே?
சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய இந்திய விஞ்ஞானி சோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்லி விஞ்ஞானி என பெருமை கொள்ள, விஞ்ஞான மேதை சமயத்தில் தான் தன்னையறியாமலே நிற்பதாகச் சொல்லி தனதறிவை மெருகூட்டுகின்றார்.

சின்மியாமிஷன் தாபகர் சுவாமி சின்மியானந்தர் நாத்தீகராய் இருந்து தவசிகளின் தோலை உரித்துக்காட்டப்போவதாக சபதமிட்டு இமயமலை சென்றவர். மீண்டும் திரும்பியபோது தவக்கோலத்திலேயே மீண்டார்.ஆராய்வில் ஈடுபடுவோர் விஞ்ஞானிகள் ஆவதுபோல் வேதநெறி ஆராய்வில் ஈடுபடுபவர் மெஞ்ஞானி ஆவதுதான் யதார்த்தம் நவிலுகின்ற உண்மை.இதுபோல்த்தான் கவியரசர் கண்ணதாசனும் கடவுளே இல்லை என்ற நாத்தீகத்தில் கருப்புச்சட்டை போட்டு; சோதிடம்,சாத்திரங்கள்,மந்திரங்கள், என்று யாவற்றையும் நையாண்டி செய்தார். நையாண்டி செய்த அவரே ஈற்றில் அர்த்தமுள்ள இந்து(வேதநெறி என்றே வழங்கப்படவேண்டும்.) மதம் எனும் பெயரில் கட்டுரை வரையும் பக்குவம் பெற்றது கண்கூடு.

ஆராயாமல் சிலர் வெளியே நின்று பிதற்றுவர். இவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள். செவியிருந்தும் செவிடர்கள். காலிருந்தும் நொண்டிகள்.

"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்குக."
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

7 comments: on "விஞ்ஞானம் வியக்கும் வேதநெறி"

வாசுகி said...

//நம்மவர்கள் நாத்தீகம் கதைப்பதிலேயே அறிவை இழந்து தம்மிடம் இருக்கும் வளங்களை மறந்து மேலைதேயத்தை துதிபாடிக் கொண்டிருந்தனர். //
முற்றிலும் உண்மை.

நாத்திகம் பேசிய பலரும் கடைசி காலத்தில் ஆத்திகவாதியாக தான் மாறினார்கள்.

நன்றி

சோழர் தலைவன் said...

அருமையான பதிவு நண்பரே சுவாரசியமான தகவல்கள்

கோவி.கண்ணன் said...

//ஆங்கிலேய ஆண்டில் வெறும் பத்து மாதங்களே இருந்தன.ஜீலியர் சீசரின் நினைவாக ஜீலை என்றும் அகஸ்டஸ் சக்கரவர்த்தியின் நினைவாக ஆகஸ்ட் என்றும் பெயரிட்டனர்.அதற்கு முதல்க்கூட பத்தாவது மாதத்தைக் குறிக்கும் டிசம்பர் தசம்(பத்து) சமஸ்கிருதத்தில் இருந்தே உருவாயிற்று என்றும் நவமி எனும் சமஸ்கிருதத்தில் இருந்தே நவம்பர் என்றும் அதாவது ஒன்பதாவது மாதம் என்றும் அஷ்டம் எனும் சமஸ்கிருதத்தில் இருந்தே எட்டாவது மாதத்தைக் குறிக்கும் அக்டோபர் உருவானது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.//

சமஸ்கிரதத்திலிருந்தெல்லாம் எதுவும் உருவாகவில்லை. பெரும்பாலும் பார்பனர்கள் இவ்வாறுதான் சொல்லுவார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல, கிரேக்கம், லத்தீன் மற்றும் சமஸ்கிரதத்தின் பழைய வடிவமான பிராகிரதம் எல்லாம் ஒரே குடும்பம் சார்ந்த மொழி. மாத்ரூ > மதர், பித்ரு > பாதர் இது போல் நிறையச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இம்மூன்று மொழிகளுக்கு இடையே உள்ள சொல் ஒற்றுமையை வைத்துத்தான் சமஸ்கிரதம் இந்திய மண்ணைச் சார்ந்த மொழி அல்ல, ஆரியர்கள் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி படக் கூறுகிறார்கள்.

சிவத்தமிழோன் said...

அன்புடன் கோவி கண்ணனுக்கு,

பத்து மாதங்களே முன்னர் ஆங்கிலேயர் தமது ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தினர் என்பதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது என்றே தோன்றுகின்றது. திராவிடரே இந்திய மண்ணின் மைந்தர்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தேயில்லை. ஆரியர் வந்தேறு குடி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சமஸ்கிருதம் இந்தோ-ஐரோப்பா மொழிக்குடும்பத்தை சார்ந்ததென்று நானும் அறிந்து கொண்டேன். ஆதலாலேயே அதிகளவு மொழி ஒற்றுமைகள் நிறைந்துள்ளன என நினைக்கின்றேன். ஆனால் இங்கு குறித்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள Geometry ,Arithmetic என்பன இலத்தீன் மொழியில் இருந்து உருவாகிய சொற்பதங்கள் என THE NEW OXFORD DICTIONARY OF ENGLISH ( thum index edition) புத்தகத்தைப் பிரட்டியபோது பார்த்தேன்.
எனினும் TRIGONOMETRY என்னும் பதம் 17ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் உருவாகியதாகவும் அது இலத்தீன் மொழியில் இருந்து உருவாகியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது ஐயத்துக்கு இடமாகவுள்ளது. எத்தனையோ சொற்கள் இலத்தீன்மொழியில் இருந்து ஏலவே உருவாகியிருக்க இச் சொல்மட்டும் காலதாமதத்துடன் வந்து ஆங்கிலத்தில் இணைந்து கொண்டமை வலுவான சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது. TRIGONE 19ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் உருவாகிய பதம் எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.(FROM LATIN TRIGONUM;திரிகோணம்). எனவே இந்தியாவிடம் இருந்த திரிகோண கணித சாத்திரத்தின் தூண்டுதலே குறித்த சொற்களை வலிய இலத்தீன் மொழியில் தேடிப்பெற்று புகுத்தவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிற்று என எண்ண இடமளிப்பதையும் தவிர்க்கமுடியவில்லை.
திருகோணமலை எனும் ஈழவள பிரதேசமானது ஆங்கிலேயரால் TRINCOMALE என பெயரிடப்பட்டது இங்கு சிந்திக்கவேண்டிய விடயமாகவேயுள்ளது.

ஏனைய ஏலவே நான் குறிப்பிட்ட GEOMETRY ,ARITHMETIC ஆகிய பதங்களின் தோற்ற ஆண்டை குறிப்பிடவில்லை குறித்த ஆங்கில அகராதியில். எனவே அதுபற்றி சிந்திக்க முடியவில்லை.

எனினும் மேலைத்தேயவர்களின் கண்டுபிடிப்புக்களுக்கு முன்னரே, நம்மவர்கள் கணிதம் தொட்டு ஏனைய துறைகளிலும் கண்டுபிடித்துவிட்டனர் என்பதை மறுக்க முடியாது.

இங்கு "நம்மவர்கள்" என அடையாளமிடும்போது ஆரியர் நம்மவரா என சந்தேகம் எழலாம். புராதன காலத்தில் இன்று ஆங்கிலமோகத்தில் தமிழர் மூழ்கியுள்ளதுபோல் சமஸ்கிருதமோகத்தில் நம்மவர் மூழ்கியிருந்தனர் என்பது தெளிவானதே. எனவே தமது சாதனைகளை எல்லாம் சமஸ்கிருதத்தில் ஏற்றினர். ஈற்றில் திராவிடருக்கு பங்கில்லையோ என்ற ஐயத்தை தோற்றுவிக்கும் மடமையுள் அது கொண்டுபோய் வீழ்த்திற்று.

திருவாசகத்தில் திருவண்டப்பகுதியில் அண்ட விரிவுக் கொள்கையை மாணிக்கவாசகர் தனது மணிவாசகத்தால் உலகறியச் செய்ததை விஞ்ஞானம் சில காலங்களுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதே.

சித்த வைத்தியம் 18 சித்தர்களின் அருட்கொடை என்பதையும் ஆழமாய் மனதில் பதிப்பது நன்றே.

நான் வேதநெறியில் காணப்படுகின்ற கடலளவு விஞ்ஞான இரகசியங்கள்...சூட்சுமங்களில் ஒரு தேக்கரண்டி அளவு ஏனும் இங்கு தீட்டியிருப்பேனோ என ஐயமாக்கவே உள்ளது.

தங்களின் அருமையான
பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

வாசுகி,சோழர்.தலைவன் ஆகியோரின் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

பின்னூட்டங்களை பெரிதும் வரவேற்கின்றேன்.
நன்றி
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்

kuma36 said...

"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்குக."

kuma36 said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சதங்கா (Sathanga) said...

இந்த வார வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகம். கண்டு மகிழ்வீர்...

http://blogintamil.blogspot.com/2014/10/blog-post_31.html

நன்றி!!!

Post a Comment