திருமூலரால் சிவபூமி என சிறப்பிக்கப்பட்ட இலங்கை மண்ணில் ஆரியத்தின் கண்பட்டதா என்னவோ தெரியாது இராமன் வந்தது தொட்டு இன்றுவரை இரத்தந்தான்.
யுத்தத்தின் கோரம் எங்கள் மக்களுக்கு பழக்கப்பட்டதொன்றுதான்.ஆனால் யுத்த சூழ்நிலைகளில் அரசியல்பலம் அரசியல் பாதுகாப்பு போன்ற எக்கவசங்களும் அற்ற எமது சைவநிறுவனங்கள் எந்தவித உரிய ஆக்கபூர்வமான தொண்டுகளை செய்யமுடியாது இடம்பெயர்ந்து அல்லல் படுகின்ற மக்களை கைவிரித்துவிடுவது சைவசமூகத்தின் துரதிட்டமே.
ஆனாலும் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் உள்ள பிரதேசங்களில் காணப்படுகின்ற ஆலயங்கள், ஆலய நிறுவனங்கள், சமயநிறுவனங்கள் முன்னின்று இயன்றவரை உதவவேண்டும் எனபது ஒவ்வொரு சைவப்பிரசையினதும் அவா. குறித்த போர்ச்சூழலை சாதகமாக பயன்படுத்தி மதமாற்றத்தில் ஈடுபடுகின்ற அந்நியசக்திகளுக்கு இவ்வாறன சூழல்கள் ஒருவரப்பிரசாதமே. இங்கு நான் அவர்களின் சேவையை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் இதை எழுதவில்லை. பிறநாட்டு சமயதொண்டுநிறுவனங்களிடம் உள்ள சேவை மனப்பான்மையை கீழ்த்தரப்படுத்தவும் விரும்பவில்லை.ஆனால் அரசியல்பலம் அற்ற சேவைசெய்யமுடியாத எமது சைவநிறுவனங்களின் நிலையால் வருந்தி இதை எழுதுகிறேன்.
கொழும்பில் இந்துமாமன்றம் எனும் திருப்பெயரில் சைவத்தை உரிமைகொண்டாடும் பெருமன்றத்திடம் ஓரளவு அரசியல்பாதுகாப்பு கவசம் இருப்பது ஒப்புக்கொள்ளவேண்டியதொன்று.அவர்கள் ஆழிப்பேரலையால் வாடிய மக்களுக்கு ஆற்றிய சேவையை அருகில் இருந்து கண்டு மனம் குளிர்ந்தவர்களில் நானும் ஒருவன். எனவே இடம்பெயர்ந்து வாடும் எம்மக்களுக்கு மக்கள் சேவையே மகேசன் சேவை என்று அவ்மன்றம் விரைந்து செயற்பட சைவப்பிரசைகளின் சார்பில் வேண்டிகிறேன்.
புறநாட்டு சமய தொண்டுநிறுவனங்களிடம் ஒரு தமிழனாய் வேண்டுவது இந்த நேரத்தை மதம்பரப்பும் நேரமாகக் கருதாது தங்களின் உயர்ந்தபட்ச சேவையை எம்மக்களுக்கு மதபேதமின்றி வழக்குக என்பதேயாகும்.
இந்தியாவில் உள்ள சைவநிறுவனங்களிடமும் சைவ ஆதீனங்களிடமும் எங்கள் நாட்டில் உள்ள சமயநிறுவனங்களை தொடர்பு கொள்வதன்மூலமோ (அகில இலங்கை இந்துமாமன்றம்) அன்றி நேரடியாக தொண்டர்களை பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள இடங்களுக்கு அனுப்புவதன் மூலமாகவோ அன்றி இந்தியத்தூதரகம் ஊடாகவோ தங்கள் தொண்டை எங்கள் மக்களுக்கு உடன்விரைந்து செயற்பட இத்தருணம் சைவப்பிரசைகள் சார்பில் வேண்டுகிறேன்.( பார்பனீய பீடங்களுக்கும் பார்பனீய சமய ஆளுகைக்கு உட்பட்ட சமய நிறுவனங்களுக்கும் இது பயனற்ற வேண்டுதல் என்பதை அறிவேன்.)
எமது சிவபூமித் திருநாட்டில் நிரந்தர சமாதானம் மலர எல்லாம் வல்ல கௌரி அம்மை உடனுறையும் திருக்கேதீச்சரத்தானின் திருவருள் பாலிக்கட்டும்
ஐயனே என்
சிவனே
வாடுகின்ற பயிர்
காணின் வாடுவர்
சைவர்-அந்தமேல்
மக்கள் வாழும்
திரு நாட்டில்
குருதியின் கால்வாய்
முறைதானோ?
தமிழான சிவமே
சிவபூமித் திருவே
நாம் வாடுவதை
அறிகிலாயோ ஐயனே
தமிழின் திருவுருவே
சிவமே
தமிழ் படுந்துயர்
தீர்ப்பாய்
அழியா அமைதி
மலர திருவருள்
பொழிவாய்
எங்கள் சிவனே
தமிழ் பரம்பொருளே
2 comments: on "யுத்தசூழலில் சைவத்தின் இக்கட்டான நிலை"
அருமையாக எழுதுகிறீர்கள்! வாழ்த்துக்கள் - நிறைய எழுத வேண்டும் பின்னர் தொடர்பு கொள்கிறேன்.
தங்க. முகுந்தன்
நன்றி தங்க.முகுந்தன் அண்ணா, தங்கள் அன்பு என் எழுத்துக்கு உரம்.
Post a Comment