மொழியபிமானமும் சமயாபிமானமும் இல்லாத வாழ்வும் ஒர் வாழ்வா என்ற ஒருவர் நிச்சயம் சூழ்நிலைகாரணமாக சைவத்தை தழுவியிருக்கவாய்ப்பேயில்லை. தமிழ் நெறி சைவம் என்றுணர்ந்து தமிழில் ஏற்பட்ட காதல் சைவநெறிவில் பிடிப்பை ஏற்ப்டுத்தியதென்பதே உண்மை.
பணத்திற்கும், பதவிகளுக்கும், சலுகைகளுக்கும்,கல்விக்கும் ஆக கிருத்தவ மதத்தை கட்டாயம் தழுவியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை இருந்த காலகட்டத்தில் அவர் சைவ சமயத்தை தழுவ நிர்ப்பந்திக்கப்பட்டார் எனும் பொருளில் எழுதியுள்ளது மதசார்பையே காட்டுகிறது.
குறித்த கட்டுரையின் முதல்பாகத்தில் தாமோதரம்பிள்ளையின் செல்வாக்கினாலேயே அவர் மாமனார் மீண்டும் சைவத்தை தழுவிக்கொண்டார் என்று எழுதப்பட்டுள்ளது. விருப்பமில்லாது கட்டாயத்தில் சைவத்தை தழுவிய ஒருவர் தனது மாமனாரை சைவத்தை தழுவும் படி எப்படித் தூண்டுவார் என்ற வினா தொங்கிநிற்பதை கட்டுரையாளர் விளக்கவேண்டும்.
நாத்தீகமாக இருந்த கவிஞர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் என்று ஆத்திகத்தை இறுதியில் தழுவியது ஏதேனும் கட்டாயத்திலா? சுவாமி தந்திரதேவா எனும் அமெரிக்கர் சைவத்தைத் தழுவி துறவியாகி இலங்கை வந்து யுத்த சூழ்நிலையிலும் தொண்டே சிவம் என்று வாழ்ந்தது ஏதேனும் கட்டாயத்திலா?சைவ சமயத்திடம் பணம், அரசியல் பலம் எதுவும் இல்லை.அதுவும் பிரித்தானியர் காலத்தில் இருந்திருப்பதாய் சொல்வது புழுகு.
ஆபிரிக்கா கவிஞன் " நீங்கள் எங்கள் நாட்டுக்கு வரும்போது உங்கள் கைகளில் பைபிளும் எங்கள் கைகளில் நாடும் இருந்தது. இன்று எங்கள் கைகளில் பைபிளும் உங்கள் கைகளில் எங்கள் நாடும் உள்ளது" என்று ஆதங்கத்தில் கவிவரைந்தான்.இப்படியே போனால் தமிழ் சமூகமும் இப்படித்தான் ஆகும் என்று அறிந்து தமிழ்மீது ஏற்பட்ட காதலால் சைவத்தையும் அதன் மேன்மையையும் உணர்ந்து சைவத்தை தழுவிய சி.வை தாமோதரம்பிள்ளையவர்களை சாதிகாரணமாகவே மதம்மாறியதாக எழுதியது பாரியதவறாகும்.
தமிழ் ஏடுகளை பெறுவதற்காக அவர் சைவநெறியை தழுவவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்தார் என்பது சோடிக்கப்பட்ட பொய். வீரமாமுனிவர் எனும் கிருத்தவபாதிரியாரும், ஜி.யு.போப்பும் சிரமங்களை தாம் சார்ந்திருந்த மதம் காரணமாக அனுபவித்தார்களா? அதற்காக சைவத்தை தழுவினார்களா என்ன? ஜேர்மனியில் எத்தனையோ ஆயிரம் நமது ஏடுகள் இருப்பதாக பத்திரிக்கையில் படித்து அறிந்ததுண்டு. அவ்வேடுகளை சைவநிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கு பாதிரிமார்கள் எல்லாம் மதம் மாறினார்களா என்ன?மேலும் சைவ நிறுவனங்களிடம் (ஆதினங்கள்) சமயம் சார்ந்த தமிழ் நூல்களே பெரிதும் பாதுகாக்கப்பட்டு கிடந்தன. எனவே கட்டுரையில் இது ஒரு வர்ணம் பூசப்பட்ட பொய் என்பது தெளிவு.
அருமையான கட்டுரையில் மதசார்புக் காழ்ப்புணர்ச்சி வந்திருக்கவே கூடாது. மதசார்போடு எழுதி " மொழியபிமானமும் சமயாபிமானமும் இல்லா வாழ்வும் வாழ்வா என்று உணர்வோடு உரைத்த சி.வை.தாமோதரம்பிள்ளையின் வாழ்க்கையை சாதி-மத பந்தங்காட்டி கட்டுரைக்கு கலங்கம் ஏற்படுத்தியது எவ்வளவு தவறு என்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.
குறித்த கட்டுரையை படிக்க இங்கே அழுத்தவும்.
0 comments: on "தமிழ் நெறிக்கு தமிழால் மீண்ட சி.வை.தாமோதரம்பிள்ளை"
Post a Comment