திருமூல நாயனாரால் சிவபூமி என்று போற்றப்பட்ட ஈழவளநாட்டில் தேவாரப்பாடல்பெற்ற திருத்தலங்கள் திருக்கேதீச்சரமும் (திருக்கேதீஸ்வரம்) திருக்கோணேசுவரமும்(திருக்கோணேஸ்வரம்)ஆகும். இவை ஈழவளநாட்டின் ஐந்தீசுவரங்களின் முதன்மையான இரு ஈசுவரங்களாகும். இவ்விரு ஈஸ்வரங்களின் திருஞானசம்பந்தர் பெருமான், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய இருவராலும் பதிகம் பாடப்பெற்ற திருத்தலம் என்னும் தனிச்சிறப்பு திருக்கேதீசுவரத்து திருத்தலத்தை ஈழத்து கோயிலாக ஈழவளநாட்டுச்சைவப்பெருமக்கள் போற்ற காரணமாகியது எனலாம்!
இத்தகு சிறப்புடைய திருக்கேதீச்சரத்திருவிழா அண்மையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. திருவிழாவின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்களை எனது நண்பர் அனுப்பி வைத்திருந்தார். உடனடியாக பதிவேற்ற முடியவில்லை. மன்னிக்க.
சைவ உலகம் கண்டுபயனடையே வேண்டுமென்ற ஆவலோடு நிழற்படங்களை அனுப்பிவைத்த நண்பர் ஈஸ்வரனுக்கு நம் அனைவரின் நன்றிகளும் உரித்தாகட்டும்.
இறைவன்- திருக்கேதீசுவரர்
இறைவி- கௌரியம்மை
தீர்த்தம் - பாலாவி
தலவிருட்சம் - வன்னிமரம்
பண்டு நால்வருக்கு அறம் உரைத்தருளிப் பல்லுல கினில் உயிர் வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிங்கை தொழக்காதலித் துறை கோயில்
வண்டு பண்செயுமாமலர்ப் பொழின் மஞ்சை நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாடொறும் துதிசெய அருள் செய் கேதீச் சரமதுதானே
(சம்பந்தர்)
அங்கத்துறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி
வங்கம் மலிகின்ற கடன் மாதோட்ட நன்னகரில்
பங்கஞ்செய்த மடவாளடு பாலாவியின் கரைமேல்
தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே" (சுந்தரர்)
திருப்பதிகங்கள் முழுவதையும் பெற்றிட ஆர்வமுள்ள அடியார்கள் தேவாரம் மின்னம்பலத்தில் பெற்றுக்கொள்ள முடியும். திருஞானசம்பந்தர் நாயனார் பாடிய திருப்பதிகத்தை இரண்டாம் திருமுறையில் 107ஆம் பதிகமாகவுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருப்பதிகம் 7ஆம் திருமுறையில் 80ஆம் பதிகமாகவுள்ளது.
இவ்வாலய வளாகத்துக்குள் பௌத்த விகாரை நிர்மாணம் செய்யும் நடவடிக்கையைக் கண்டு சைவமக்கள் மனம் வாடியசெய்தி இணையத்தளங்களிலும் செய்தித்தாள்களிலும் அண்மையில் வந்திருந்தது நினைவிருக்கக்கூடும். திருக்கேதீசுவரத்தை கதிர்காமம் போல் இழந்துவிடாது காத்திட சைவப்பெருமக்களும் சைவ அமைப்புகளும் முன்வந்து உழைக்கவேண்டுமென தாழ்மையுடன் வேண்டுகிறேன். ஈழத்து சைவாதீனமான வணக்கத்துக்குரிய ஸ்ரீலஸ்ரீ நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் அரசியல்ரீதியாக சமயத்துக்குவரும் பங்கத்தை போக்க முன்வந்து குரல்தர வேண்டுமென சைவமக்கள் எதிர்பார்க்கின்றனர். யாமார்க்கும் குடியல்லோம் என்பது சைவ அடியார்களின் திருப்பண்பு. எம்பெருமானே துணையென்று திருப்பணியில் முன்நிற்போமாக!
0 comments: on "பாவங்கள் அறுக்கும் பாலாவியின் கரைமேல்......!"
Post a Comment