வேதநெறிக் கடவுள்களின் திருவடிவங்களை நீச்சலுடையில் பொறித்து அதை மங்கைகளுக்கு அணிவித்து நடையழகு காட்சியில் அறிமுகஞ்செய்த அசிங்கமான செயல் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளதென்பதை இணையச்செய்தியூடாக அறியக்கூடியதாக இருந்தது.
ஏனையோரின் சமயத்தை புண்படுத்தி இரசிப்பது சிலருக்கு இனிமையான ஒன்று. அது ஒரு மனநோயின் வடிவம்! இந்த மனநோய் நம்மவருக்கு இல்லாமைக்கு காரணம் பரந்தமனப்பான்மை! இந்த அருமையான சால்பை நமக்கு அளித்த நமது வேதநெறிக்கு நன்றிகூறியே ஆகவேண்டும்.
‘ஏகம் சத் விப்ர பஹூத வதந்தி' - என்கின்றது இருக்கு வேதம். அதாவது ‘உண்மை ஒன்றே, அதை சான்றோர்கள் பலவிதமாக அழைக்கின்றார்கள்" என்கின்றது.
அகளமாய் யாரும் அறிவுஅரிது அப்பொருள்
சகளமாய் வந்து என்று உந்தீபற
தானாகத் தந்தது என்று உந்தீபற
-திருவுந்தியார் சைவசித்தாந்த நூல்
கடவுளாகிய அந்தப் பொருள் உருவமற்றது. யாராலும் அறியமுடியாதது. ஆனால் அன்பால் நாம் நினைத்த வடிவத்தை தனக்கு அமைத்துக்கொண்டு, அந்த வடிவத்தோடு நினைத்தவர் முன்வந்து தோன்றும் என்று திருவுந்தியார் சைவசித்தாந்த நூல் தெளிவுறுத்துகின்றது.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்கின்றது திருமந்திரம்.
இவ்வண்ணம் எமது வேதநெறிச் சைவச்சால்பு நன்னெறியில் பாரை வழிநடத்துவதுபோல் உலகிலுள்ள சமயங்கள் யாவும் நன்னெறியில் பாரை இட்டுச்சென்றால் பார் சாந்தமும் சமாதானமும் நிறைந்ததாய் காட்சியளிக்கும்!
ஏனைய சமயத்தவரை பாவிகளாகவும்,சாத்தான்களாகவும் பாவிக்கின்ற கொடூரமான மனநோய்க்குள் வீழ்ந்துவிடாது காத்து அன்பே சிவமென்ற அருமையான தத்துவங்களை கொண்டு ஆன்மீக ஞானத்தை வளர்ப்பதனால்த்தான் உலகத்தில் அகிம்சை என்ற சொல் உயிர்ப்புடன் இருக்கின்றது. அன்பு என்ற சொல் அர்த்தத்தோடு புழக்கத்திலுள்ளது.
நீச்சலுடையில் எமது கடவுள்களின் வடிவங்களைப் பொறித்தமைக்கு உரிய கண்டனங்களை வேத-சைவ உலகம் முன்னெடுக்குமானால் யாவரும் மகிழ்ச்சியடைவர். ஆனால்; காமப் பொப் இசைப்பாடல் இறுவெட்டுகளில் மேற்கத்திய நாடுகளில் பிள்ளையார் சிலை பொறிக்கப்பட்டிருந்தமை, பிரபல நடிகையொருவர் தனது பிறந்தநாள் குதப்பியை (கேக்கை) பிள்ளையார்சிலையாகச் செய்து அதை வெட்டி உண்டு மகிழ்ந்தமை, வீட்டுதளபாடங்களிலும்,கழிவறை உபகரணங்களிலும், செருப்புகளிலும் எமது கடவுள் உருவங்களைப் பொறிக்கின்றமை போன்ற ஏராளமான செயற்பாடுகளை வேத -சைவ உலகம் ஏற்கனவே கண்டு கண்டனங்களை பதிந்தும் எந்தவிதமான உருப்படியான தாக்கத்தையும் நாம் ஏற்படுத்தியிருக்கவில்லை! அதற்கும் நமது சகிப்புணர்வே காரணம்!
எமது கடவுள் வடிவங்களை இவ்வண்ணம் இழிவடையச்செய்யும் நோக்கில் பயன்படுத்துகின்றார்களாயினும் உண்மையில் இழிவடைவது இவர்களும் இவர்கள் வளர்த்த சூழல் காரணிகளுமே!
எனவே; உரியமுறையில் அவுஸ்ரேலிய அரசு அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்புக்கேட்டு அவுஸ்ரேலியாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை நீக்குவார்களா? அவுஸ்ரேலியாவின் நலன்விரும்பிகள் கேட்க்கும் கேள்வி இது!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
( "ஆபாச காட்சிகள்" தவிர்க்கும் பொருட்டு இணையத்தில் இதுதொடர்பாக உலாவுகின்ற நிழற்படங்கள் தணிக்கைக்கு உட்படுத்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது. )
2 comments: on "வேத நெறியை புண்படுத்த எண்ணி அவுஸ்ரேலியா பட்ட அவமானம்!"
செய்தி மூலம் - http://tamilcnn.com/
http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=21644&Itemid=457
Post a Comment