"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, August 9, 2010

மூன்று வயதில் தேவாரம் பாடினாரா?

மூன்று வயதில் தேவாரம் பாடினாரா? எவ்வண்ணம் சாத்தியம் இது? நம்பக்கூடிய கதையா இது? இவ்வண்ணம் கேள்விக் கணைகளை தொடுப்பர் அறிவுக் கோளாறுடையோர்! சரி பாடினது உண்மையென்றால் அதற்கு என்ன ஆதாரம்? என்று ஏளனச் சிரிப்பை பூப்பர் இக்கூட்டத்தார்!

திருஞானசம்பந்தப் பெருமானின் திருக்கதையை அறிந்துகொள்ள இக்காணொளிகளை இணைத்துள்ளேன். ஒன்று திரைப்படத்தில் இருந்து தொகுக்கப்பட்ட காட்சி. மற்றையது நாயனாரின் திருவரலாற்றுக் கதையை அன்பர் ஒருவர் எடுத்துச் சொல்லும் காணொளியாகும்.




ஞானப்பால் அருந்திய மூன்று வயதுக் குழந்தை பாடிய திருப்பதிகதில் முதலாவது பாடல் "தோடுடைய செவியன்" ஆகும்.

திருச்சிற்றம்பலம்
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
 
திருச்சிற்றம்பலம்

  •  மொஸார்ட் என்பவர் மேலைத்தேய இசையில் மிகச்சிறந்த இசையமைப்பாளராக மிளிர்ந்தவர். ஐந்து வயதிலேயே இசையமைக்கத் தொடங்கியவர்.
          http://en.wikipedia.org/wiki/Wolfgang_Amadeus_Mozart

  • அதிதி கௌதம் கேசி என்ற மூன்று வயது நேபாளச்சிறுமி அதிதி என்னும் பெயரில் இசைத்தொகுப்பு வெளியீட்டை செய்து எல்லோரையும் அதிசயிக்க வைத்துள்ளார். உலகிலேயே மிகச்சிறிய வயதில் இசைத்தொகுப்பு மேற்கொண்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார் இந்த மூன்று வயதுச் சிறுமி!அதிதி இரண்டு வயதிலேயே பாடத்தொடங்கிவிட்டதாக அவரது அப்பா கூறியுள்ளார்.

  • ஏற்கனவே மூன்று வயதில் இசைத்தொகுப்பை கிளியோப்பட்ரா என்பவர் வெளியிட்டுள்ளார்.            
          http://blog.xnepali.com/music-video-of-atithi-kc-the-youngest-singer-in-the-world/


  • இந்தியாவின் இமாச்சல்ப் பிரதேசத்தைச் சேர்ந்த அக்ரிட் ஜஸ்வால் என்னும் சிறுவன் ஏழுவயதில் அறுவைசிகிச்சையையை இன்னொரு சிறுமிக்கு வெற்றிகரமாக மேற்கொண்டு மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளான். இச்சிறுவனின் தாயாரின் கூற்றுப்படி, இச்சிறுவன் ஐந்து வயதிலேயே சேக்ஸ்பியரின் கதையை வாசிக்கத்தொடங்கிவிட்டான். சிறுபிராயத்திலேயே மருத்துவநூல்கள் படிக்கத் தொடங்கி மருத்துகளையும் ஊர்மக்களுக்கு சொல்லி உதவிசெய்யத் தொடங்கியதும், ஏழைப் பெற்றோர் தமது பெண்பிள்ளைக்கு அறுவைசிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளும்படி வேண்டிநிற்க இச்சிறுவனும் அறுவைசிகிச்சையை மேற்கொண்டுள்ளான்.
          http://en.wikipedia.org/wiki/Akrit_Jaswal

  • முருகேசன் என்னும் தமிழ்நாட்டு மருத்துவர் தனது பதினைந்து வயது மகனைக் கொண்டு தனது மருத்துவமனையில் பிரசவ அறுவைசிகிச்சையை மேற்கொண்டமை மருத்துவ உலகை அதிர வைத்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது.
          http://news.softpedia.com/news/The-World-039-s-Youngest-Surgeon-15-Years-Old-58171.shtml

  • செல்வி பாக்கியசிறி என்னும் சிறுமி ஏழுவயதில் மருத்துகள் பலவற்றை மிகச்சரியாக எடுத்துரைத்து மருத்துவர்களை மயக்கத்தில் வீழ்த்தினார்.
  • பாலமுரள் அம்பாதி தனது 17ஆவது வயதில் 1995இல் அமெரிக்காவில் மருத்துவப்பட்டத்தைப் பெற்று உலகில் மிகச்சிறிய வயதில் மருத்துவரானவர் என்ற பெருமையை கொண்டவராக உள்ளார். 1995இல் மருத்துவப்பட்டத்தைப் பெறும்போது 17 வயது என்றால் மருத்துவக் கல்லூரியில் சேரும் போது பாலமுரளியின் வயது 11 அன்றி 12 வயதாகவே பொதுவில் அமைந்திருக்க வேண்டும்.
          http://www.metro.co.uk/news/world/765610-worlds-youngest-doctor-set-to-be-seven-year-old-selvi

அதுசரி........என்ன சிற்றார்கள் நிகழ்த்தியுள்ள ஆச்சரியமான விடயங்களை தரவுபடுத்தியுள்ளேன் என்று தோன்றுகின்றதா? சைவப்பாரம்பரியத்தில் திருஞானசம்பந்த நாயனார் வரலாறு மேன்மை மிகுந்தது. சிவனடியார்களில் ஞானசம்பந்தரை முருகனின் திருவடிவமாக போற்றுவர். ஆனால் "மூன்று வயதில் தேவாரம் பாடினாரா?" என்று நாத்தீகவாதிகளும் சைவநெறியை உணரும் நல்லூழ் வாய்க்கப்பெறாத பிறசமயத்தவரும் கேளிசெய்த காலமுண்டு! சிலர் அறிவுக்குறைவால் இன்னும் தமது கேளிக்கூத்தை தொடருகின்றனர். அவர்களின் அறிவுக்குறைவை இங்கு எடுத்துக்காட்டவே சிற்றார் நிகழ்த்தியுள்ள ஆச்சரியமான விடயங்களை தொகுக்க ஊந்திற்று!

தேவாரம் மின்னம்பலத்திலிருந்து  "தோடுடைய செவியன்" திருப்பாடலுக்குரிய பொருளையும் குறிப்புரையையும் இங்கு தந்துள்ளேன்.   குறிப்புரையை சிரத்தையுடன் படிக்க.நன்றி:-http://www.thevaaram.org/

பொழிப்புரை:-
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!
குறிப்புரை:-
தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது.

மூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும்.

உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு.

இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்.

ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு.

தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது.
குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார்.

`ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்.




சத்திரசிகிச்சை செய்தல் என்பது சிரமமான வேலை என்றாலும் அனுபவப் பயிற்சியில் யாரும் இலகுவில் பழகக்கூடிய ஒன்றே! அனுபவப் பயிற்சி ஒன்றே முதன்மையானது! மருந்துகளின் பெயர்களை பாடமாக்கும் நினைவாற்றல் திறன் இருந்தால் படித்து ஒப்புவிப்பதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால் இதை சிறுவர்கள்  செய்யும்போது ஆச்சரியமான விடயமாகின்றது! நினைவாற்றலும் அனுபவப்பயிற்சியும் இருப்பின் இச்சாதனைகளை பொதுவாக அரங்கேற்றமுடியும்! நினைவாற்றல் இச்சிறுவயதில் அமைவதும் அனுபவப்பயிற்சியை எளிதாகக் கற்றுக்கொள்வதும் முற்பிறவியின் கல்விஞானத்தின் விளைவே !

ஆனால் சைவநெறியின் முழுமையையும் உணர்த்தும் திருப்பாடல் "தோடுடையசெவியன் "என்னும் தேவாரம் என்பதை குறிப்புரையைக் கொண்டே உய்த்துணரலாம். எனவே இப்பாடலை முதற்பாடலாகக் கொண்டு மூன்றுவயதில் பதிகம் பாடினார் என்றால் அது அம்மையின் திருமுலைப்பாலால் விளைந்த சிவஞானமே என்றால் மிகையில்லை!
தோடுடைய செவியனில் தொடங்கிய திருஞானசம்பந்தரின் தேவாரம் எந்தகு சிவானந்தத் திருவருளைக் கொண்டிருந்தது என்பதற்கு, தேவாரங்களால் அவர் ஆற்றிய பணிகளும் அதிசயங்களுமே சாட்சி! எனவே மூன்று வயதில் உலகத்தாரால் உய்த்துணர்வதற்கு கடினமான பொருட்செறிவு கொண்ட தேவாரத்தைப் பாடினார் என்றால் அதில் ஐயம் கொள்ளத்தேவையில்லை! மூன்று வயதில் பாடுதல் என்பது  இன்றைய பல்வேறு சிற்றார் நிகழ்த்தும் நிகழ்த்தியுள்ள ஆச்சரியங்கள் வாயிலாக உண்மைத்தன்மை உடையதே என்று துணிபு கொள்ளலாம். உலகத்தாரால் உய்த்துணர்வதற்கு அரிதான பொருட்செறிவு கொண்ட திருப்பாடலாக அது அமைந்திருப்பது சிவஞானப்பாலை பருகியமையால் சாத்தியமாயிற்று! இத்தகைய உலகத்தாரால் இலகுவில் உய்த்துணர முடியாத பொருட்செறிவோடு பாடியமையே அவர்பெற்ற சிவஞானத்தை உணர்த்துவதோடு, முற்பிறவிக் கல்வியறிவால் ஏனைய சிறுவர்கள் ஆற்றும் ஆச்சரியங்களிலிருந்து ஞானசம்பந்தக் குழந்தையை தனியாகப்பிரித்து உயர்த்திக் காட்டுகின்றது எனலாம்!

எனவே "மூன்று வயதில் பாடினாரா?" என்ற ஒருசிலரின் ஏளனக் கேள்விக்கு  கடந்தகாலத் தரவுகளும் நிகழ்கால ஆச்சரியங்களுமே விடை!
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

5 comments: on "மூன்று வயதில் தேவாரம் பாடினாரா?"

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//Twinkle, Twinkle, Little Star" is a popular English nursery rhyme. The lyrics are from an early nineteenth-century English poem, "The Star" by Jane Taylor. The poem, which is in couplet form, was first published in 1806 in Rhymes for the Nursery, a collection of poems by Taylor and her sister Ann. It is sung to the tune of the French melody "Ah! vous dirai-je, Maman" (oldest known publication 1761).[1] The English lyrics have five stanzas, although only the first is widely known. Mozart wrote twelve variations on ‘Ah! Vous dirai-je, Maman’. It has a Roud Folk Song Index number of 7666.
//
மொசாட் இசையமைத்த இசையொன்று இப்பாடலுக்கு பொருத்தமாக அமைந்துள்ளது.

சிவத்தமிழோன் said...

யோகன் பாரிஸ், தகவலுக்கு நன்றி. வீரகேசரியில் {வீரகேசரி வாரவெளியீடு 18.07.2010 (யாழ் பதிப்பு) கதிர்- நான் சித்தன் பதில்கள் }
"twinkle twinkle little star"பாடலை இயற்றியதாக மொசார்ட் என்பவரின் பெயரை சுட்டியிருந்தமையால் இத்தகவல்பற்றி ஆராயமுற்படாது அப்படியே அக்கருத்தை உள்வாங்கிவிட்டேன்.

பிழையாக கருத்து ஏனையோருக்கு செல்வதைத் தவிர்க்க, "டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டிர் ஸ்டார் என்ற ஆங்கிலக் கவிப்பாடலை தனது ஐந்து வயதில் மொஸார்ட் என்பவர் எழுதினார்."என்னும் வரியை கட்டுரையில் இருந்து அகற்றியுள்ளேன். நன்றி.

சிவத்தமிழோன் said...

அனோனிமஸ் அவர்களே, சைவமக்கள் விழிப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது எனலாம். திருக்குறளையும் சைவசித்தாந்தத்தையும் வைணவநெறியையும் "வரலாற்றுப்படி வந்திராத" தோமஸ் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய கிருஷ்தவத்தின் திரிபு என்று தமிழ்நாட்டில் போதிக்கும் கிருஷ்தவவிசமக்கூட்டம் இருப்பதை அறியீரோ? "என்ன கொடுமை சரவணா" என்ற திரைவரியை உச்சரிக்க வேண்டியதுதான்!!!!

முகவை மைந்தன் said...

யாப்பிலக்கணம் தப்பாமல் மூன்று அகவையில் பாடல் பாடுவது??? சரவல் தான். இது சைவர்களின் நம்பிக்கை, அவ்வளவு தான்.

இந்தப் பாடல் நுட்பமான மொழியைக் கொண்டிருக்கிறது. தோடு பெண்கள் அணிவது. பெண்ணைப் பகுதியாக உடைய இறைவன்றதை 'தோடுடைய செவியன்'றார். அப்ப ஆண்கள் காதில் அணிகலன் அணிவதில்லையா? அதுக்குப் பேரு கடுக்கன், குழை. தோடு பெண்கள் அணிவது. அடுத்த பாடல்களிலும் இப்படிச் சிறப்புச் சொற்கள் இருக்கின்றன. நீங்களே கண்டுபிடியுங்கள்.

இரண்டாவது பதிகத்தில் புகழூரின் எழில் கொஞ்சும் அழகை இனிமையான மொழியில் இசைகோர்த்துச் சொல்வார். ஆமா, 'புயலாரும் புகழூரே'ன்னா என்ன பொருள்?

Post a Comment