"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Tuesday, November 10, 2015

தீபாவளியும் சைவத்தமிழருக்கு உரிய சைவப்பண்டிகையே!!!

இன்று பலர் தீபாவளியை ஆரியர் பண்டிகை என்றும் தமிழர் கொண்டாடக்கூடாதென்றும் அசூரரான தமிழரை கண்ணன் கொன்றநாள் என்றும் கூறுகின்றனர். தமிழன் செத்தநாளை தமிழர் கொண்டாடலாமா என்று கேள்விக்கணைகள் தொடுக்கின்றனர்!!!! என்னே அறிவீனம்!!!!!!!! இது மிசனரிகளின் சதி!!!

நெற்றிமுழுக்கப் வெண்பூச்சு,சிவப்பு பூச்சுக்கள் அணிவது தமிழர் பண்பாடு. அதை இந்தியாவிலுள்ள அனைந்து வைதீகமதத்தினரும் பின்பற்றுகின்றனர்! அவர்கள் யாரும் இது தமிழர் பண்பாடென்று இதனை ஒதுக்குவதில்லை.

சிவவழிபாடு சிந்துவெளித் தமிழரின் வழிபாடு. அதனையாரும் சிந்துவெளி தமிழரின் வழிபாடென்று ஆரியர் கூறுவதில்லை.

மாயோன் மேய காடுறை உலகமும் - தொல்காப்பியம்
திருமால் வழிபாடு தென்னாட்டில் முல்லைநிலத் தமிழரின் நிலவிய வழிபாடு. அதனையும் ஆரியர் தமிழருடையதென்றுகூறி கைவிட்டிலர்.

கண்ணன் சங்ககாலத் தமிழ்நூல்களில் போற்றப்படுகின்ற ஓர் தெய்வம். திருமாலின் அவதாரமாக சொல்லப்படும் தெய்வம். கரியநிறத்தவன் என்று வைதீகசமய நூல்கள் அனைத்தும் சொல்கின்றன. எனவே அவன் தமிழ்த் தெய்வம் என்பதில் என்ன ஐயம்???
எனவே தமிழ்த் தெய்வமான கரியநிறக் கண்ணன் அசூரனை அழிப்பதில் என்ன தலையிடி உருவாயிற்று இந்த மேதாவித்திராவிடர்களுக்கு????

சரி! அசூரன் என்றால் தமிழன் என்ற இவர்களின் அடுத்தவாதத்துக்கு வருவோம்!!!
காகாசூரன் - இந்திரனின் மகன் இராமரின் பிரம்மாஸ்திரத்துக்கு தனது கண்ணைப் பறிகொடுத்தவன்.இந்திரனின் மகனுக்கும்(தேவருக்கும்) அசூரன் என்று பெயர் உள்ளதே? தேவர் ஆரியர் என்னும் வாதம் நியாயமெனின், அவர்களுக்கு அசூரர் என்று பெயர் எங்கனம் பொறுந்தும்?
அசூரர் என்றால் தீயசிந்தனை உடையவர் என்றும் தேவர் என்றால் நற்சிந்தனை உடையவர் என்றும் பொருள். அவ்வளவே!!!!

சிவபெருமானை மதியாது, தட்சனின் யாகத்தில் பங்குபற்றிய தேவர்கள் வாங்கிய அடியும் உதையும் சிந்துவெளித் தமிழரின் சிவனுக்குக் கீழ்த்தான் தேவர்கள் என்பதை வைதீகம் ஏற்றதன் விளைவு என்பதை இந்ததிராவிடமேதாவிகள் உணர்வார்களா? சைவசமயப்படி, தேவர்கள் என்போர் புண்ணியபலத்தால் தேவபதவிகளைப் பெறுபவர்கள். ஆனால் அவர்களுக்கும் மலபந்தம் உண்டு.

இரகுமன்னன் (இராமனின் முன்னோர்) இந்திரனை வென்றதை இந்த மிசனரிகளின் ஆட்டுவிப்பால் ஆடுகின்ற திராவிடமேதாவிகள் எந்த ஆரிய திராவிடக் கதைக்குள் உட்படுத்துவார்களோ சிவசிவ!!! ஆரியவீட்டுச் சகோதரச் சண்டை என்பார்களோ????


மனிதர்கள் தேவரை வணங்குவதாகவும் தேவர்களுக்குப் பயந்தவர்களாகவுமே வேதமந்திரங்கள் உள்ளன. இங்கு வேதம் ஆரியர் நூலாயின், அதில் ஆரியர் தம்மை மனிதராகவே குறிப்பிடுகின்றனர். அவர்கள் தேவர்களுக்குப் பயந்தவர்களாகவே, தேவர்களை வழிபடுபவர்களாகவே கருதப்படுகின்றனர்.
மனிதர்களே, வேள்விகளில் இந்திரனையும் அக்கினியையும் போற்றுங்கள்.- ரிக்வேதம் மண்டலம் 1 - 21 - 2
(உருத்திரன்)அவன் எங்களுடைய குதிரைகளுக்கும்,செம்மறிகளுக்கும்,செம்மெறிக் கடாக்களுக்கும்,மனிதர்களுக்கும், பெண்களுக்கும்,பசுக்களுக்கும் இனிமையாய்த் தோன்றும் சுகத்தைத் தருவானாக. -ரிக் வேதம் மண்டலம் 1 - 43 - 6

தேவர்களான மித்திரனும் வர்ணனும் அர்யமானும் ஆதியான தூதுவனான உன்னை(அக்கினியை)எழுப்புகின்றார்கள். - ரிக்வேதம் மண்டலம் 1 - 36 - 4
ஈவிரக்கமற்று கொலைத்தொழிலைச் செய்யும்போது தேவரையும் அசூரன் என்றநிலையில் இருப்பதாகவே வேதம் உரைக்கின்றது.

அசுரனான வருணனே! உன்னுடைய வேள்வியில் தீமை செய்பனை எந்தப் பயங்கர ஆயுதங்களால் நீ அழிக்கின்றாயோ அவற்றால் நீ எங்களைத் துன்புறுத்தாதே. நாங்கள் ஒளியிலிருந்து புறத்தே செல்லாதிருப்போமாக. நாங்கள் வாழ துஷ்டர்களை விலக்கவும். - ரிக் வேதம்.மண்டலம் 2 - 28 - 7

எனவே, தேவர் என்பவர் வேறு. மனிதர்(ஆரியர்) என்பவர் வேறு. இது தெளிவாகின்றது.அத்துடன் அசூரர் என்பவர் தீமைசெய்பவர் என்ற பொருளிலேயே வேதத்தில் உள்ளது. இங்கு அசூரர் என்றால் திராவிடர் என்பது திராவிடமேதாவிகளின் மிசனரிக் கண்டுபிடிப்பு!!!!!


சரி, நரகாசூரனுக்கே வருவோம்!!! அவன் தமிழன் என்பதற்கு இவர்கள் வைக்கும் ஒரேவாதம் "அசூரன்" என்பதுதான்!!! அதுதவிர வேறெந்த வரலாற்று,இலக்கிய ஆதாரமும் இல்லை.
ஏற்கனவே யாம் இங்கு விளக்கியதுபோல், கரியநிறத் தமிழ்த் தெய்வமான கண்ணனின்  துணையோடு, சத்தியபாமா நரகாசூரனை வதைக்கின்றாள். இங்கு சத்தியபாமா பூமாதேவியின் அவதாரம். நரகாசூரனோ பூமாதேவியின் மகன். பூமாதேவி திருமாலின் மனைவி. எனவே, இந்த திராவிடமேதாவிகளின் கதைப்படி பார்த்தால், ஆரியர் ஆரியரின் மகனை அல்லவா அழித்துள்ளனர்!!!! அதற்கு தமிழர் ஏன் கவலைப்படவேண்டும்!!!! ஆரியத் தாயும்(?? ஆரியந் தந்தையும் (?) சேர்ந்து உலகுக்கு அட்டூழியங்களைச் செய்த தமது மகனை அழித்துள்ளனர். இது பாராட்டப்பட வேண்டிய விடயம்தானே!!!!!
முல்லைநிலக் கடவுள்,கரியநிறம் என்பவற்றை வைத்துப்பார்த்தால், தமிழ் கண்ணனும் அவரது மனைவியும் இணைந்து உலகுக்குக் கொடுமைசெய்த பிரகஜோதிஷம் என்னும் வங்கதேசத்தை ஆண்ட தமது மகனை அழித்துள்ளனர். உலக நன்மைக்காக, தமது மகனையே வதைத்த வீரத்தமிழர்களை பாராட்டவேண்டியது தமிழர் கடமைதானே!!!! இதில் திராவிடமேதாவிகளுக்கு என்ன தலையிடி வந்தது!!!!!!

பிரம்மதேவனிடமே நரகாசூரன் தன்னைத் தன் தாயைத்தவிர வேறுயாரும் கொல்லக்கூடாதென்ற வரத்தைப் பெற்றான்.  இந்தத் திராவிடமேதாவிகளின் திராவிட நரகாசூரனுக்கு ஆரியப் பிரம்மதேவன் வரங்கொடுத்தான் என்றால், ஆரியர்கள் கொடையின் வடிவம் என்றல்லவா பொருள்கொள்ள வேண்டும்!!!!!!

தீபாவளியைப் போல், இராமனையும் ஆரியன் என்று திராவிடமேதாவிகள் உரைப்பர். இராவணனைக் கொன்ற இராமனும் கரியனாகவே இராமாயணம் கூறுகின்றது. எனவே திராவிடமேதாவிகளின் நிற தத்துவப்படி இராமனும் தமிழனே!!!!!  இராமாயண காலம், ஆரியர் குடியேற்றக்காலத்திற்கு முற்பட்டது. எனவே இராமாயணத்தில் கரிய இராமன் இராவணனை வதைத்ததில் என்னதான் இந்தத் திராவிடமேதாவிகளுக்கு இடைஞ்சலோ???

எனவே, இதிலிருந்து நாம் திராவிடமேதாவிகளின் ஆரிய-திராவிட மோட்டுவாதங்களின் வெறுமையை உணரலாம்.
சரி, இது சைவர்களுக்குரியதா? கண்ணன் வைணவக் கடவுளாயிற்றே!!! சைவர்கள் கொண்டாடின் சைவக்கற்பு என்னாவது? இப்படியும் சிந்திப்போர் உண்டு.

இராமன்,கண்ணன்,திருமால் என்னும் தெய்வங்கள் அனைத்தும் சைவக்கடவுளர்களே. அதில் சைவர்கள் குழம்பாது இருக்கவேண்டியது சைவர்களின் கடமை.

கண்ணன்,இராமன்,திருமால் மூவரும் வீபூதிதாரணர் என்றே வேதங்களும் உபநிடதங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன.
திரிசூலம் என்னும் வலைத்தளத்தில் கண்ணன்,இராமன், திருமால் மூவரும் வீபூதிதாரணர் என்பதை விளக்கி மூலநூல்களின் ஆதாரத்துடன் கட்டுரை உள்ளது. படித்துப் பயன்பெறுக. அதிலிருந்து சில உதாரணங்களை நான் இங்கு தருகின்றேன்.

இராமர் வீபூதிதாரண சிவபக்தர்
//////“க்ருதாபிஷகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த் வகராஜ புத்ர்யா ருத்ரஸ்ஸ விஷ்ணுர் பகவாநி வேச : ” என்று கூறுகிறது வால்மிகி ராமாயணம். இச்சுலோகத்தின் பொருள் :
“பகவானும் ஈசருமான உருத்திரர் பார்வதியாரோடு ஸ்நாநம் பண்ணி விஷ்ணு தேவருடன் விளங்கினதுபோல, இராமர் சீதையோடு கோதாவரியில் மூழ்கி இலக்குமணருடன் விளங்கினார் ”

“ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ” -ராம ரஹஸ்ய உபநிஷத்
இதன் பொருள்,”இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் ” என்பதாகும்.மேலும்,
அதர்வண வேதத்திலுள்ள பஸ்மஜாபால உபநிஷத், “பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு ” என்று கூறுகிறது. “திருமால் ஸ்ரீ காசி ஷேத்திரத்திலே தென்திசைக்கணிருந்து ,விபூதி ருத்திராக்ஷதாரணமுடியவராய் உபாசிக்கின்றனர்” என்பது பொருள்./////// -நன்றி -திரிசூலம்  

கண்ணன், திருமால் வீபூதிதாரண  சிவபக்தர்கள்
///////மகாபாரதம்
ஆதி பர்வம்,அத்தியாயம் 241 :
“கிருஷ்ணன்…மகாதேவ பூஜைக்காக முப்பத்து நான்கு தினம் இரவும் பகலும் மஹோத்சவம் நடப்பதென்று சொல்லி ...."
வனப் பர்வம்:
i) அத்தியாயம் 20 : “க்ருஷ்ணர் ‘நான் சிவபெருமானை தலையால் வணங்கினேன்’ என்றார் ”
ii) அத்தியாயம் 82 : ‘விஷ்ணு ருத்ரரை ஆதாரித்தார்’
துரோணப் பர்வம் :
i)அத்தியாயம் 81 : ‘ க்ருஷ்ணரும் பார்த்தனும் … ஆசமனஞ் செய்து கைகளை குவித்துக் கொண்டு…. ருத்ரரை நமஸ்கரித்து ‘
ii)அத்தியாயம் 202 :‘நாராயணர் ருத்ரரைக் கண்டு நமஸ்கரித்தார்’ ‘ருத்ரரை புண்டரிகக்ஷர் பக்தியுடன் நமஸ்கரித்து ஸ்தோத்திரம் செய்யலானார்’
கர்ணப் பர்வம் :
i)அத்தியாயம் 21 : 
‘அர்ஜுனனும் கேசவரும் பகலில் செய்யவேண்டிய வைதிக
கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு,முறைப்படி பிரபுவான ருத்ரரைப் பூஜித்து’
ii)சாந்திப் பர்வம் ,அத்தியாயம் 110 :
‘இந்திரனும் விஷ்ணுவும் ருத்திரரும் ….பிரம்ம தேவரும்,தேவர்களின் தேவரான எந்த மகேஸ்வரரை ….துதிக்கிறார்களோ ‘///////// -நன்றி -திரிசூலம் 
கண்ணன் உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்றதாக மகாபாரதம் கூறுகின்றது.
மேலும் சிவகீதை(பத்மபுராணத்தில் உள்ளது)யில் இராமர் அகத்தியரிடம் சிவதீட்சை பெற்று, திருநீறை உடல்முழுதும் பூசி, இராவணனை வெல்வதன்பொருட்டு பசுபதாஸ்திரம் பெறுவதற்காக, பாசுபதவிரதம் இருந்தார் என்கின்றது.

திருமால் தனக்கு சக்ராயுதம் வேண்டி, சிவபெருமானுக்கு தனது கண்ணையே தாமரையாக அர்ப்பணம் செய்த சிவபக்தர் என்று சைவசமயம் கூறுகின்றது.

மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் - திருப்பல்லாண்டு

இராமனுஜரின்  வைணவதாபனத்திற்குப் பிற்பாடே, தனிமதமாக வைணவம் வளரும்போது வீபூதிக்குப்பதிலாக நாமம்போடும் முறையை வைணவம் ஏற்படுத்தியது. அது வைணவர்களின் சமயவிருப்பு. ஆனால் மூலநூல்களின்படி அவர்கள் சைவதெய்வங்கள்.சிவபக்தர்கள்.

/////உடையவர் சூர்ண விளக்கம் எனும் வைணவ சுவடி கூறுகிறது, “ஸ்ரீ பெரும்பூதூரில் இவ்வருஷத்திற்கு 870 வருஷமான கலி நாலாயிரத்து நூற்றெட்டுக்கு பிங்கள வருஷம்…திருவவதரித்தருளிய ஸ்ரீ பாஷ்யக்காரர் காலத்திற்கு முன்பு இப்போதுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் பஸ்மாதிதாரணராய் இருந்தார்கள்…அப்படியிருந்த இவ்வைஷ்ணவர்களுக்கு ச்வேத பீத வர்ண புண்டரங்களையும் -நூதனமாக வெளியிட்டு அவைகளை திக்விஜயஞ் செய்வித்து தாபித்தார் கிடாய்..அதற்கு முன் இவர்களுக்கு திருமண்ணேது சிவந்த ஸ்ரீ சூர்ண மேது காண் ” .மேலும்,வடகலைக் குருபரம்பரை கூறுகிறது ,”சகவர்ஷம் ஆயிரத்திருபத்தொன்றான பகுதான்ய வர்ஷம் பங்குனி மாதத்தில் -திரு நாராயணப் பெருமாளைக் கண்டு திருமஞ்சனஞ் செய்வித்துக் கல்யாண ஸரஸின் வட மேற்கில் திருமண்ணையும் கண்டெடுத்துக் கோயில் நகர் முதலியவைகளைத் திருத்தி ” .ஆக,ராமானுஜர் தாண்,சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்,திருமண்ணை அறிமுகப்படுத்தியவர் என்று நமக்கு புலனாகிறது..ஆக,ராமானுஜருக்கு முன் வாழ்ந்த ராமர்,கிருஷ்ணர் எல்லோரும் திருமண்ணையா அணிந்திருப்பார்கள் ??///// -நன்றி -திரிசூலம்

ஒருவனே மூவர் என்றும் ஒன்பது தினமும் அன்பால்
பரமனை அருச்சித்தாரும் பாம்பு அணைப் பள்ளி வள்ளல்
புரம் அது பொருந்தி வாழ்வர் போக பேதங்கள் பொங்க 
அரியன் யாவும் இல்லை அவர் தமக்கு அமலனால் ஏ. - சிவதருமோத்திரம் (சைவ உபாகம நூல்)

சம்புபட்சமாய் உள்ள பிரம்மா,திருமாலையும் அரனோடு சேர்த்து மூவரையும் ஒருகடவுளாகக் கருதி , சிவபெருமானை ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாகப்  பூசிப்பவர்கள் வைகுண்டப்பதவி பெறுவர் என்கிறது சைவ உபாகம நூல். அதாவது சம்புபட்சம்,அனுபட்சம் என்று இருவகை பிரம்மா, விட்ணுக்கள்  உண்டு. அனுபட்சம் என்றால் ஆன்மாக்கள் பெறும் பதவிகள். சம்புபட்சம் என்றால் சிவபெருமானே எடுக்கும் வடிவங்கள். அவதார தெய்வங்கள் அனுபட்சமே.  கண்ணன்,இராமர் என்பவர்கள் சைவத் தேவர்கள்.

பாம்பு அணைப் பள்ளியானை
பழமொழி பகர்ந்த பாவி
கோம்பி ஆய் உதர அங்கி
கூர்ந்திடக் குலையும் அன்றே - சிவதருமோத்திரம் (சைவ உபாகம நூல்)

 பாம்பிலே பள்ளிகொள்ளும் நாராயணனை இழிவாகப் பேசியவன் ஓணானாய்ப் பிறந்து வயிற்றிலே தோன்றும் தீயால் உடல்குலைந்து நிற்பான் என்று சைவ உபாகமநூலான சிவதருமோத்திரம் உரைக்கின்றது. எனவே நாம் சைவத்திருமாலை சம்புபட்சமாகக்(சிவவடிவாக) கருதி வழிபடின் வைகுண்டவாசம் அதன்பலனாய்க் கிட்டும் என்பது தெளிவு.

 ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் - காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி(பதினொராந் திருமுறை)

தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்,
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து -வைணவ நாலாயிர திவ்யபிரபந்த பாசுரம்(பேயாழ்வார் )

சைவநூற்களில் சொல்லப்படுகின்ற திருமாலுக்கு வலப்பாகம் அளித்த எம்பெருமானின் அருட்செயல் வைணவ நூற்களில் இல்லை. எனினும்  வைணவ ஆழ்வாரான பேயாழ்வார் திருப்பதியில் சைவத்திலுள்ள இவ்வருட்செயலை  உணர்ந்துகொண்டதன் வெளிப்பாடாக தமது பாசுரத்தில் சிவபெருமான் பாதியாகவும் திருமால் பாதியாகவும் தமக்கு வெங்கடேசப் பெருமாளின் காட்சி தோன்றியதாகப் பாடுகின்றார். எனவே வைணவப் பேயாழ்வார் உணர்ந்தவாறு, சைவநூற்களின்படி, சம்புபட்ச திருமால் சிவவடிவமே. அவ்வாறான சம்புபட்சமே சிவபெருமானின் நவதருபேதங்களில் ஒன்றாய் சைவம் கூறுகின்றது. கண்ணன்,இராமன்,அனுபட்ச திருமால் போன்றவர்கள் அனுபட்ச வடிவங்கள் (ஆன்மாக்கள் பெறும் பதவிகள்) சிவபக்தர்கள். சிவபெருமானால் அதட்டிக்கப்பட்டு, காத்தற்தொழிலையும் ஏனைய தொழில்களையும் செய்பவர்கள். வீபூதிதாரணர்களான அவர்களும் சைவர்களே. எனவே, இராமர்,கண்ணன்,அனுபட்ச திருமால் ஆகியோரை வீபூதிதாரண சிவபக்தர்களாகக் கருதி, சிவபக்தர்களுக்குரிய மரியாதையை வழங்கவேண்டியது நம்கடமை. மேலும், சைவத்தில் திருமால் உமையம்மையின் அண்ணன்.எனவே, சம்புபட்ச அனுபட்ச திருமால்களின் வேறுபாடுகளை உணராது இருவகைத் திருமால்களையும் ஒன்றாய்க்கருதி திருமாலை வைணவர்கள் முழுமுதற்கடவுளாய் கருதுகின்றார்கள் என்றமைக்காக, சைவர்கள் திருமால் சைவத்தெய்வமல்ல என்று முடிவெடுத்தல் கூடாது. அது அறியாமை!!!!


சைவர்கள் தமது வழிபாட்டறையில் இராமர்,கண்ணன்,திருமால் படங்கள் வைக்கும்போது படத்தின்மேல் படங்களைத் தாபிக்கும்போது செய்யும் வீட்டுப்பூசையில் வீபூதியையே பூசிவிடுதல் ஈழத்து சைவமரமாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சைவர்கள் இராமர்,கன்ணன்,திருமாலை வீபூதிதாரணர்களை படங்களை வரைந்துகொண்டால் இன்னும் சிறப்பாக அமையும்.

திருமுருக கிருபானந்தவாரியாரின்படி, தீபாவளியானது சிவசக்தி இணைந்த நாள். எனவே அவ்வண்ணமும் நாம் இத்திருநாளைக் கொண்டாடலாம். மேலும் இத்தீபாவளிக்கு பல்வேறு கதைகள் பிரதேசத்துக்கு ஒன்றென்ற அடிப்படையில் உண்டு. இதனை சீக்கியர்களும்,சமணர்களும்கூட தமது மதத்திற்கு ஏற்ப காரணங்களைக் கொண்டு கொண்டாடுகின்றனர்.எனவே இது சமணத்தில் இருந்து வைதீகசமயங்களுக்கு வந்ததா அன்றி வைதீகசமயங்களில் இருந்து சமணத்துக்கு வந்ததா என்று விதண்டாவாதங்கள் செய்யத் தேவையில்லை. எப்படி, முருகனின் வைகாசி விசாகமானது பௌத்தர்களுக்கு புத்தரின் பரிநிர்வாணம் அடைந்தநாளாக விளங்குகின்றதோ அதுபோல் ஒருநாளே பல்வேறு சமயத்தவர்களுக்கு சிறப்புநாளாக விளங்குவது பரதகண்டத்தில் தோன்றிய சமயங்களுக்கு பொதுவான இயல்பு. எனவே இதில் திராவிடமேதாவிகள் தேவையில்லாமல் வயிற்றெரிச்சல் படத்தேவையில்லை.

அதுசரி, தமிழ்க் கடவுள் முருகன் சூரபத்மர்களைக் கொண்டாரே......அதனைத் தமிழர் சூரன்வதை என்று தமிழக ஆலயங்களில் கொண்டாடுகின்றார்களே......அது முறையா? இப்படியொரு ஐயம் சிலமேதாவிகளுக்குத் திடிரென வந்துவிட வாய்ப்புண்டு!!!  இம்மேதாவிகளே தெரியாத்தனமாக "தமிழ்க்"கடவுள் முருகன் என்பதை ஏற்பதால் விளக்கக்கட்டுரைகள் எழுதவேண்டிய சிரமங்கள் இல்லை என்றுணர்கின்றேன்.

சரி, நம்சைவத் தமிழர்கள் அனைவரும் இத்தீபாவளித் திருநாளை கரியநிற வீபூதிதாரண சைவத்தமிழ்க் கண்ணன் நரகாசூரனை வதைத்த நன்னாளாக, சக்தி சிவத்தில் இடப்பாதி பெற்ற திருநாளாக கொண்டாடுவோமாக. எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வேதக்குறிப்பு:
ரிக்வேதம் : அலைகள் வெளியீட்டகம் - சமஸ்கிருதமூலத்திலிருந்து தமிழாக்கம் ம.ரா.ஜம்புநாதன். செவ்விதாக்கம் வீ. அரசு


பிற்குறிப்பு:
பலகாலமாகக் கட்டுரைகள் எழுதமுடியாமற் போயிற்று. , தீபாவளித் திருநாளன்று தீபாவளிக்காய் கட்டுரை எழுத எம்பெருமானின் திருவருட்சம்மதம் வாய்த்துள்ளது. மருத்துவப்பணி,அதுசார்ந்த உயர்கல்வி என்பனவே என்னுடைய நேரத்தை "சிவத்தமிழோன்" வலைப்பூவுக்காய் ஒதுக்குவதற்கு  இடைஞ்சலாகவுள்ளன. நேரம் வாய்க்கும்போதெல்லாம் வலைப்பூவில் கட்டுரைகளூடாக அனைவரையும் சந்திக்க முயற்சிக்கிறேன். எல்லாம் திருவருட் சம்மதம்.


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 comments: on "தீபாவளியும் சைவத்தமிழருக்கு உரிய சைவப்பண்டிகையே!!!"

Vel Tharma said...

உன்னதமான ஆய்வு

Post a Comment