"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, December 11, 2014

கௌமாரம் என்ற மதம் உண்டா?

இன்று சமய எழுத்தாளர்களில் பலர் கௌமாரம் என்ற பெயரில் முருகவழிபாட்டை தனிமத வழிபாடாக காட்டமுனைவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.  இவர்கள் சமய அறிவுமட்டுமல்ல, வரலாறு, இலக்கிய அறிவு அற்றவர்கள் என்பதோடு செந்தமிழ்ப் பண்பாட்டுக் கரிசனை அற்றவர்கள் என்பதே கசப்பான உண்மையாகும்.

தன்னை சைவர் என்று அடையாளப்படுத்தாது, ஸ்மார்த்த சமயத்தவர் என்று அடையாளப்படுத்திய ஏகன்மவாதக் கொள்கையுடைய ஆதிசங்கரர் ஆறுமதங்கள் என்று சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,காணபத்தியம்,சௌரம் என்பவற்றைப் பட்டியலிட்டு, முறையே அவை சிவன்,திருமால்,அம்மன்,முருகன்,பிள்ளையார்,சூரியன் ஆகிய கடவுள்களை முழுமுதற் தெய்வமாக வழிபடும் சமயங்களென அடையாளப்படுத்தினார். ஆனால் இவரது இவ்வடையாளப்படுத்தலை அன்றும்,இன்றும்,என்றும் எவரும் ஏற்றிலர்.இவ்வாறான அடையாளப்படுத்தும் முறை ஆதிசங்கரர் கூற்றாக உருவாக்கப்பட்டு அண்மைக்காலத்தில் புகுத்தப்பட்ட இடைச்செருகல் கூட!

சைவம்,வைணவம் என்பவற்றிற்கு முறையே ஆகமங்கள்,தனிக் கொள்கைகள் உண்டு. ஆனால் ஏனையவற்றிற்கு அவ்வாறு ஏதும் இல்லை. தனிமதம் என்ற ஒன்றிருக்கேமேயானால் அம்மதத்துகென்று தனி ஆகமங்கள் இருக்கவேண்டுமல்லவா?  வைணவத்துகென்று பாஞ்சராத்திரம்,வைகாசம் என்னும் ஆகமங்கள் உள்ளதுபோல் கௌமாரம்,காணபத்தியம் என்பவற்றுக்கு இருக்கவேண்டுமல்லவா? ஆனால் முருகன் ஆலயப் பூசைகள் குமாரதந்திரம் என்னும் சைவ உபாகம நூலின் வழியும் ஏனைய சைவாகமங்கள் வழியுமே பின்பற்றப்படுகின்றன.

வைணவத்தை எடுத்துக் கொண்டால் அதில் விஷிட்டாத்வைதம்,துவைதம் என்னும் இரு கொள்கைகள் உண்டு. சைவத்தை எடுத்துக் கொண்டால் அதில் சித்தாந்த சைவம்(தூய அத்வைதம்), காஷ்மீரக சைவம்,வீர சைவம் போன்ற பல்வேறு சமயக் கொள்கைகள் உண்டு. ஆனால் இதுபோல் காணபத்தியம்,கௌமாரத்திற்கு இல்லை.

மணிமேகலையில் சைவவாதி என்னும் பாத்திரத்தினூடாக சைவசமயம் அடையாளப்படுத்தப்பட்டதுபோல், கௌமாரம் என்னும் சமயப்பெயர் பண்டு தமிழ் இலக்கியங்களில் எங்கும் காணோம். தென்னாட்டில் தொன்றுதொட்டு வழிபடப்பட்டுவந்த முருகவழிபாட்டை பண்டுதமிழ்நூல்கள் கௌமார சமயமாக எங்கும் அடையாளப்படுத்தவில்லை.

சரி, குறைந்த பட்சம் அந்த சமயங்களை ஒழுகும் அடியவர்களாயினும் இருக்க வேண்டுமல்லவா?

நக்கீரர்,கச்சியப்ப சிவாச்சாரியார்,குமரகுருபரர்,அருணகிரிநாதர்,பாலன் தேவராயர்,பாம்பன் சுவாமிகள்......இப்படி முருகனடியார்களாய் திருமுருகன்பால் தோத்திரங்கள் பாடிய அனைவரும் சைவர்களே. தம்மை எவ்விடத்தும் கௌமாரத்தவராக அடையாளப்படுத்தியிருக்கவில்லை.
சங்க காலத்தமிழ் இலக்கியமான முருகனின் பக்தி இலக்கியமான திருமுருகாற்றுப்படையை பாடிய நக்கீரர் சைவர். சிவமைந்தனாகவே முருகனைப் பாடுகின்றார்.

ஆல்கெழுகடவுள் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே-திருமுருகாற்றுப்படை

கந்தபுராணத்தைப் பாடிய கச்சியப்ப சிவாச்சாரியார் ஒரு சைவர். இவர் முருகப் பெருமானை சைவத்திலகமாக,சைவ நாயகனாக, ஆறுமுகச் சிவனாகவே குறிப்பிடுகின்றார்.

இந்திரராகிப் பார்மேல் இன்பமுற்று இனிதுமேவிச் 
சிந்தையில் நினைந்த முற்றிச் சிவகதி தன்னில் சேர்வர்
அந்தமில் அவுணர்தங்கள் அடல் கெட நின்ற செவ்வேள்
கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோதுவோரே

முருகவழிபாட்டினால் சிவகதியே சேரும் என்று முருகனைச் சிவனாகவே காட்டுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதர் முருகனை கௌமார மதமாக அடையாளப்படுத்தவில்லை. திருமுருக கிருபானந்தவாரியார் ஓர் வீரசைவர். முருகனை கௌமாரக் கடவுளாக அணுகவில்லை. ஆறுமுகச் சிவனாக சைவக்கடவுளாகவே வழிபட்டார்.

சிவப்பரம்பொருளின் எண்குணங்களும்   சத்,சித்,ஆனந்தம் என்னும் இம்மூன்று தன்மைக்குள்  அடங்கும் என்பது சைவசித்தாந்தம். இதன் விளக்கமாக விளங்கும்  சோமஸ்கந்த மூர்த்தத்தில் முருகன் இறைவனின் ஆனந்தம் என்னும் தன்மையை விளங்குகின்றார். இவ்வாறு, சைவசித்தாந்தம் சிவன்,சக்தி,முருகனை சத்,சித்,ஆனந்தமாக கொள்கின்றது. சிவனே முருகன் என்பதுதான் சைவசித்தாந்தம்.


திருமகன் முருகன் தேவியேல் உமையாள் - திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்

திருமுருகாற்றுப்படை பன்னிருதிருமுறைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இவ்வண்ணம் முருகவழிபாடு சைவவழிபாடாகவே தொன்றுதொட்டு விளங்கிவருகின்றது. இதுவே எம்தமிழ் மரபு.


சுடரோ சிவபெருமான்; சூடு பராசக்தி
திடமார் கணநாதன் செம்மை – படரொளியோ
கந்தவேளாகும்; கருதுங்கால் சற்றேனும்
வந்ததோ பேத வழக்கு 
-பழம் பாடல்(ஞானசாரம்)
நெருப்பு – சிவபெருமான், அதில் உள்ள சூடு – உமாதேவி, நெருப்பின் நிறம் – கணபதி, அதன் ஒளி – முருகன். இவை ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை.
சிவன்,சக்தி,முருகன்,கணபதி இவர்களுக்குள் பேதமில்லை. இதுதான் நம்தமிழ் வழக்கு.

கணபதி வழிபாட்டை தமிழ்மரபில் வளர்த்த ஔவையார் தனது விநாயகர் அகவலில்
"சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி"
என்று சைவவழிபாடாகத்தான் காட்டுகின்றார். காணாபத்தியம் என்னும் தனிவழிபாடாக இல்லை.

இப்படி, சைவ மரபிலும் தமிழ் மரபிலும் முருகனையும் சிவனையும் பிரித்தறியும் பழக்கம் வழக்கத்தில் என்றுமே இருந்ததில்லை. இன்று முளைத்த காளான்கள், கொஞ்சமேனும் படிப்பறிவும் பகுத்தறிவும் இன்றி ஸ்மார்த்த புழுகுமூட்டைகளைச் சுமந்துசெல்லும் கழுதைகளாகிவிட்டதன் விளைவுதான் கௌமாரக் கட்சி!!!  சைவ சித்தாந்தக் கொள்கையை தர்க்கரீதியில் எதிர்கொள்ளமுடியாதுபோகவே ஏகன்மவாதத்தை நிலைநாட்ட, சைவநெறியை வலுக்குன்றச்செய்யும்  முயற்சியாகவே ஷண்மத கதையை ஸ்மார்த்தர் உருவாக்கினர். அன்று எடுபடாதுபோன இக்கதை இன்று அரைகுறை சமயமேதாவிகளால் மீண்டும் உலாவரத் தொடங்கியுள்ளது.
அண்மையில் முகநூலில் கௌமாரமதத்தவராகிய பாம்பன் சுவாமிகள் என்று ஓர் சமய எழுத்தாளர் கட்டுரை தீட்டியிருந்தார். பாவம் அவர் பாம்பன் சுவாமிகளின் பாடல்களைப் படித்ததில்லைப் போலும்.

தெய்வநசை முன் தந்தான் தெய்வப்பிரதான 
சைவநசை பின் தந்தான் சாற்று எனக்குச் - சைவமுடி
வாகிய சித்தாந்த நசை தந்தான் அதன்பின் மெய்
யோக நசை தந்தான் சேயோன்
என்று குமரகுருதாச சுவாமிகளான பாம்பன் சுவாமிகள் சைவநெறியினை ஒழுகும் வாய்ப்பையும் சைவசித்தாந்த வழி நிற்கும் பேறையும் முருகப்பெருமானே தந்ததாகப் பாடுகின்றார்.

செழும் தூவி மயில் ஊரும் சிவனுக்குத் தாசன் - பாம்பன் சுவாமி

மயிலை வாகனமாக உடைய சிவன் என்றே முருகனை பாம்பன் சுவாமிகள் பாடுகின்றார்.

இப்படிப்பட்ட ஓர் அற்புத சிவஞானியை சமய அரசியலுக்காய் "கௌமாரர்" என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு இன்றைய இந்துமதம் ஸ்மார்த்தவலையில் சிக்குண்டுள்ளது.



வாரியார் சுவாமிகள் சொற்பொழிவில்  இருந்து......

உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். "ஆண்பிள்ளை" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.

நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

"செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்"
- என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.

இராமன் அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணன் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

"ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்" - கந்தபுராணம்.

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். "நீ தர" - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். "நின்னையே நிகர்க்க" என்றார்.

மேலும் படிக்க...