"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Monday, June 13, 2011

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-4

இப்பகுதியில் பௌதீகவிஞ்ஞானத்தின் துணையுடன் சைவசித்தாந்த கருத்து விளக்கப்பட்டுள்ளது. முன்னைய சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் தொடர்களை படிக்காது; இப்பகுதியை படிக்க முனைய வேண்டாம். ஏனெனில் இப்பகுதியின் அருமையை உணர்ந்துகொள்வதற்கு முன்னைய பகுதிகளில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் ஓரளவு தெளிவு பெற்றிருத்தல் வேண்டும்.
சொற்பதம் கடந்த சொரூபநிலையில் உள்ள சிவபெருமான் ஆன்மாக்களின் மேற்கொண்ட பெருங்கருணை காரணமாக;
தனது எண்குணங்களில் ஒன்றாகிய பேரருள் உடைமையால்;தடத்தநிலைகளை பூணுகின்றார்.

தடத்தநிலை என்றால் என்ன? குழப்பம் வேண்டாம்! சும்மா இருக்கும் இறைவனின் இயல்புதான் சொரூப இயல்பு என்று முன்னர் பார்த்தோம். அதாவது சிவனே என்று சும்மா இருக்கின்ற நிலை! தடத்தநிலை என்பது இறைவனின் இயங்குநிலை எனலாம்.

தடத்தநிலைகள் மூன்றுவகைப்படும்.அவையாவன;
1.அருவம்,அருவுருவம்,உருவம் என்னும் மூவகை வடிவம் தாங்குதல்
2.ஐந்தொழில் ஆற்றுதல்
3.ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்றல் 
தாய்ப் பன்றியை இழந்த பன்றிக்குட்டிகளுக்கு தாய்ப்பன்றி வடிவெடுத்து பாலூட்டிய பரமனின் பெருங்கருணை, பாலுக்காக அழுத உபமன்யு குழந்தைக்கு பாற்கடலையே வரவைத்து வழங்கிய பெருங்கருணை, குளத்தில் குளிக்கச்சென்ற தந்தையைக் காணாது தவித்த ஞானசம்பந்தக்குழந்தைக்கு ஞானப்பாலை உமையைக் கொண்டு பொற்கிண்ணத்தினால் ஊட்டிவிட்ட பெருங்கருணை, யாவற்றையும் கடந்த அதிசூட்சுமமான சொரூபநிலையையுடைய சிவபெருமான், தடத்தநிலைகளை ஏன் பூணுகின்றார் என்பதை அஞ்ஞானபிடியிலுள்ள நம்மனைவருக்கும் உணர்த்தும் என்பது தெளிவு.

தடத்தநிலைகளின் பொருட்டு; சிவபெருமான் பெருங்கருணையினால் தாதான்மிய சம்பந்தம்,அத்துவித சம்பந்தம் ஆகியவற்றை பூணுகின்றார்.

அது என்ன தாதான்மிய சம்பந்தம்? 

தாதான்மிய சம்பந்தம் என்பது; உயிர்களை உய்விக்கும் பொருட்டு மூவகைத் திருவடிவங்களை தாங்கவும்,ஐந்தொழில்களை மேற்கொள்ளவும் சக்தியோடு இறைவன் கொள்ளுகின்ற சம்பந்தம் ஆகும்.


மூவகைத் திருவடிவங்கள் யாவை?
அருவம்,அருவுருவம்,உருவம் என்பவையாகும்.

அருவம் = கண்ணிற்கு புலனாகாது சக்தி வடிவமாக இருந்தே, காரியங்களை செய்வது. இலயசிவன்(நிஷ்கள சிவன்,சத்தர்) என்று அழைக்கபடுவர். சிவபெருமான் ஞானசக்தியுடன் மட்டுமே பொருந்தியிருக்கும் தன்மையால் அருவ வடிவம் தாங்குகின்றார்.

அருவுருவம் = ஞானசக்தியையும் கிரியாசக்தியையும் சம அளவில் கொள்வதன் மூலம் பூணுகின்ற வடிவம். ஒருமுறை புலனாகியும், புலனாகாமலும் இருப்பது இவ்வடிவமாகும். புலனாகும்போது முகம்,கை,கால் போன்ற உறுப்புக்கள் ஏதுமின்றி காட்சியளிப்பது. ஒளி, இலிங்கம் ஆகியன அருவுருவத் திருவடிவங்களாகும்.

உருவம் = ஞானசக்தியைவிட கிரியாசக்தியை மிகுவித்து; அதன்மூலம் கண்களுக்கு புலனாகும்வகையில் முகம்,கை,கால் போன்ற உறுப்புகளுடன் தெளிவாகத் தோன்றுவது உருவத் திருவடிவமாகும். தென்முகக்கடவுள்,சோமஸ்கந்தர்,அர்த்தநாதீசுவரர்,நடராசர் போன்ற மகேசுவர மூர்த்தங்கள் இதற்குள் அடங்கும்.
இறைவன் சக்தியுடன் பொருந்துகின்ற தன்மைகளுக்கு ஏற்ப திருவடிவங்களை தாங்குகின்றமையால் தாதான்மிய சம்பந்தம் ஒருமையுள் இருமை எனப்படும். இறை,சக்தி ஆகியன பொருட்தன்மையில் ஒன்றாயினும்;செயற்பாட்டில் இருதிறப்படுவதால் ஒருமையுள் இருமை என்று தாதான்மிய சம்பந்தத்தை அழைப்பர்.

அதாவது சிவமே சக்தி. சும்மா இருக்கும் நிலையில் சிவன் என்றும் இயங்கும் நிலையில் சக்தி என்றும் இறைவன் அறியப்படுகின்றான். பௌதீகவிஞ்ஞானத்தில் இயக்கசக்தி,அழுத்தசக்தி என்று சக்தி பலவாறு வகைப்படுத்தப்படும்.
உராய்வற்ற இலட்சிய தொகுதியில் பந்தின் நிலையை கீழுள்ள படம் காட்டுகின்றது. இங்கு, சக்தியின் தன்மைக்கு ஏற்ப பொருளின் நிலை வேறுபடுகின்றது. அழுத்தசக்தியாக இருக்கும்போது பொருள் இயங்காது நிற்கின்றது. சாய்தளத்தில் கீழ்நோக்கி உருளுகின்றபோது அழுத்தசக்தி குறைவதுடன் இயக்கசக்தி கூடுகின்றது.  கிடையான தளத்தை பந்து அடைந்ததும் பெற்ற வேகத்துடன் பந்து உருண்டபடி இருக்கும். இப்போது இயக்கசக்தி மாத்திரமே உள்ளது. எனவே, சக்தியின் வடிவம்மாற பொருளின் இயல்பும் மாறுகின்றது. இதுபோல்த்தான், சக்தியின் தன்மைக்கு ஏற்ப சிவத்தின் திருவடிவங்கள்(அருவம்,அருவுருவம்,உருவம்) ஏற்படுகின்றன.

தாதான்மிய சம்பந்தத்தின் விளைவால் இறைவன் ஆற்றும் ஐந்தொழில்கள் யாவை? விஞ்ஞானம் எங்கனம் இறைவனின் ஐந்தொழில் தத்துவத்தைக் கண்டு வியந்து நிற்கின்றது?அத்துவித சம்பந்தம் என்றால் என்ன? சைவசித்தாந்தத்தின் அத்துவிதத்துக்கும் சங்கரரின் அத்துவிதத்துக்கும்(கேவலாத்துவிதம்) என்ன் வேறுபாடு? மலர இருக்கின்ற தொடர்களில் ஆராய்வோம்.

சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் 5
மேலும் படிக்க...