"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Thursday, February 11, 2010

சிவராத்திரி விரதம் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன? (இரண்டாம் பாகம்)

"சிவராத்திரி விரதம் விரோதி ஆண்டில் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன? " கட்டுரையை மீளாய்வுக்கு உட்படுத்தி எழுதியது.

கடந்த வீரகேசரி வாரவெளியீட்டின் கலைக்கேசரிப் பகுதியில்சிவராத்திரி சௌரமான முறையில் அனுட்டிப்பதே நியதியானது என்ற அடிப்படையில் ஏனைய சைவ ஆகமங்களைச் சுட்டிக்காட்டி விளக்கி கட்டுரை வெளியாகியுள்ளது. சிவாகமங்கள் என்பன சிவனின் வாக்காகக் கொள்ளப்படுகின்றன. காமிக ஆகமத்தில் மகாமாதத்தில் சிவராத்திரி அனுட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மகாமாதம் என்பது சௌரமான அடிப்படையிலான கும்பமாதமா(மாசி) அன்றி சாத்திரமான அடிப்படையிலான சாத்திரமாதமா என்று பெருங்குழப்பம் இரு பஞ்சாங்கத்தாராலும் சைவ சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


சாத்திரமாத கணிப்பில் மாகமாசம் என்பதற்கு வேறு பெயர் எதுவும் இல்லை. சௌரமான கணிப்பில் கும்பமாதம் என்று உண்டு. இதையே மாசி என்போம். எனவே, தனியே காமிக ஆகமத்தைக் கருத்தில் கொள்ளும்போது சாத்திரமாதமே என்றே பொருள்படுகின்றது. இரகுநாதையர் வழிவந்த இ.வெங்கடேச ஐயரால் எழுதிப் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையில் ஏனைய ஆகமங்களைப் பற்றி விரிவாக எடுத்துக் கையாண்டு விளக்கவில்லை. எனவே, காமிக ஆகமத்தை கருத்தில் கொண்டு பெப்பிரவரி 12ம் நாள் என்று கட்டுரை பிரசுரித்திருந்தேன். எனினும் ஆத்திசூடியில் சொல்லப்பட்டுள்ள 'தூக்கி வினை செய்" என்றமைக்கு அமைவாக, ஆராய்ந்து பார்க்கும்போது ஏனைய சைவ ஆகமங்கள் திட்டவட்டமாக சிவராத்திரி விரதம் சௌரமான அடிப்படையில் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று என்று வரையறுத்து உள்ளமையால், காமிக ஆகமம் சொல்லும் மாகமாதம் கும்பமாதம்  என்றே கொள்ளவேண்டியுள்ளது.

சிவபெருமானின் வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய சூட்சம ஆகமம், ஈசான முகத்திலிருந்து தோன்றிய புரோத்கீத ஆகமம்,சத்யோசாதத்திலிருந்து தோன்றிய காரண ஆகமம் என்பன தெளிவாக கும்பமாதமே மாகமாதம் என்று வரையறுக்கின்றது. எனவே, இறைவனின் சத்யோசாத முகத்திலிருந்து தோன்றிய காமிக ஆகமமும் ஏனைய கந்தபுராணம் போன்றனவும் கூறும் மகாமாதம் என்பது கும்பமாதம் எனக்கொள்வதில் தவறில்லை.

சாத்திரமான கணிப்பை ஆதரிப்போர், காமிக ஆகமத்தில் சௌரமானதா அன்றி சாத்திரமானதா என எதுவும் கூறப்படாமையினாலும் ஏனைய காமிகத்துக்கு பிற்காலத்தில் கிடைத்த சைவாகமங்கள் சௌரமென்று வலிந்துரைப்பதாலும், பிற்சேர்க்கையாக இருக்க ஏதுவுண்டு என்று  சாதிக்கின்றனர்.

இன்று மூவாயிரம் பாடல்கள் உள்ளதாகக் கூறப்படுகின்ற திருமந்திரத்தில் மூவாயிரத்து நாற்பத்து ஏழு பாடல்களைக் காணக்கூடியதாகவுள்ளது. எனவே 47 பாடல்கள் பிற்சேர்க்கையே! எனவே பிற்சேர்க்கை என்பது கருத்தில் கொள்ளவேண்டிய வாதமாகவேபடுகின்றது எனினும்
ஆனாலும் ஏனைய எல்லா ஆகமங்களிலும் இக்கருத்தே வலியுறுத்தப்பட்டுள்ளதால், பிற்சேர்க்கையாக காட்டமுடியாது. மாகமாதம் என்பதைத்தவிர வேறு எப்பெயருமே சாத்திரமானக் கணிப்பீட்டுக்கு இல்லாமை அவர்களுடைய வாதத்துக்கு ஆதரமாக  உள்ளது. மாகமாதம் என்பது சாத்திரமானதுக்குரிய மாகமாதமா அன்றி சௌரமானதுக்குரிய கும்பமாதமா என்று குழப்பம் நிலவியமையால், எம்பெருமானால் சௌரமான கும்பமே காமிகத்தில் தாம் குறிப்பிட்ட மாகமாதம் என்பதை தெளிவுபடுத்த ஏனைய சைவாகமங்களை பூவுலகுக்கு அளித்தார் என்று கொள்வதில் தவறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

சிவபெருமானாலேயே சைவாகமங்கள் படைக்கப்பட்டதாக சைவமக்கள் போற்றுவர்.எனவே சைவாகமங்களின் சாரம் என்று கருதும்போது சௌரமான கணிப்பீடே சிவராத்திரிக்கு ஏற்றது என்றாகின்றது.

இ.வெங்கடேச ஐயர் எடுத்துக்காட்டுகளாக கையாண்ட ஆவணிச் சதுர்த்தி மற்றும் நவராத்திரி போன்ற விரதங்கள் சாத்திரமான முறையிலேயே கணிக்கப்படுகின்றன. இவ்விரதங்கள் சௌரமானமுறையில் ஒழுகவேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் உத்தராயணக் காலப்பகுதி விரதங்கள் சௌரமான முறையில் கணித்தல் வேண்டும் என்று உள்ளது. எனவே உத்தராயணக் காலப்பகுதிக்குள் (தை-ஆனி) வராத ஆவணிச் சதுர்த்தி,நவராத்திரி என்பன சாத்திரமானமுறையில் கணிக்கப்படுகின்றன. எனவேதான் இங்கு எந்தவிதமான சிக்கல்களும் எழவில்லை. இவற்றுக்கு கடந்த எனது கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள கோட்டுப்படங்களின் விளக்கங்களே பொருந்தும் .


முன்னைய காலத்தில் இதுபோல் சர்ச்சை எழுந்தபோது திருவாவடுதுறை ஆதீன முதல்வர் பல ஆகம விற்பனர்களை அழைத்து கருத்தறிந்து சௌரமான முறையே உகந்தது என்று வலியுறுத்தியுள்ளார். எனவே சௌரமான முறைப்படி ஒழுகுவதில் தவறு இல்லையென்றே வலியுறுத்த விரும்புகின்றேன்.

எனினும் பெரும்பாலான சைவ ஆலயங்கள் தமிழகத்தில் பெப்பிரவரி 12ஐ அனுட்டிக்கின்றன. காமிக ஆகமத்தை முதன்மையாய்க் கொண்டு ஆச்சார அனுட்டானங்களையும் பூசைகளையும் பேணும் ஆலயங்களுக்கு காமிகமே முதன்மையானது. எனவே, இவ்வாலயங்கள் காமிகத்தைத் தாண்டி ஏனைய சைவ ஆகமக் கருத்துகளை அனுசரிப்பதில் சிரத்தை கொள்வதில்லை. இதுவே இவ்வண்ணம் பெப்பிரவரி 12ஐ சிவராத்திரியாக அனுட்டிப்பதற்கு காரணமாக இருக்கின்றது.

கட்டுரையாளர்கள் தமது கருத்தை வலியுறுத்துவதையே நோக்காகக் கொண்டு கட்டுரை எழுதுவதால் சமூகத்துக்கு முழுமையாக கருத்துகளை தெரிவிப்பதில்லை.தமது கருத்துகளை ஆதரிக்கும் விடயங்களை அலசிவிட்டு, ஏனையவற்றை கைவிட்டு விடுவர். ஆனால் சிறியேன், சைவ சமூகத்துக்கு சிறந்த ஊடக வழிகாட்டல் இல்லாமையினை உணர்ந்து எனது கருத்துகளை வழங்குவது என்பதைவிட சைவச் சான்றோர்களின் கருத்துகள் அடிப்படையில் சாலச் சிறந்த கருத்துகளை வழங்குவதையே நோக்காகக் கொண்டு; எழுதிவருவதை தொண்டாகக் கொண்டிருப்பதாலேயே, எனது கடந்த பதிவில் இ.வெங்கடேச ஐயர் எழுதிய கருத்துகளை வைத்து விளக்கம் பெற்று, அதை சைவ சமூகம் விளங்கிக் கொள்ளமுடியாமையைக் கண்டு, அவருடைய கட்டுரைக்கு அடிப்படையாகக் கொண்டு எளிய முறையில் விளக்கி பெப்பிரவரி 12ம் நாள் மிக உகந்தது என்று பொருள்பட எழுதியிருந்தேன். குறித்த பதிவில் இதை தெளிவுபட உரைத்தும் இருந்தேன். ஆனால் வீரகேசரி வாரவெளியீட்டு கட்டுரையை அவர்களின் இணையத்தளத்தில் வாசித்தைக் கருத்தில் எடுத்து சீர்தூக்கிப் பார்க்கையில் மார்ச்சு 13ம்நாள் சாலச் சிறந்ததாகப்படுகின்றது.

வீரகேசரி வாரவெளியீட்டுக் கட்டுரையில் சிவராத்திரி நிர்ணயம் என்னும் நூலில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளனர். அதற்கு முன்னர் சௌரமான முறையே உகந்தது என்று கருத்து வெளியிட்ட எந்த சைவ அமைப்புகளுமாயினும் சரி, சைவ ஆலயங்களாயினும் சரி, சைவ அறிஞர்களாயினும் சரி, காரணமாக "திருவண்ணாமலை,சிதம்பரம் என்பன மார்ச் 13ம் நாள் அனுட்டிக்கின்றன" என்று கூறினரே ஒழிய எந்தவிதமான விளக்கத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால் பெப்பிரவரி 12ம் நாள் உகந்தது என்று பரவலாக பலர் விளக்கம் கொடுத்திருந்தனர். ஞானசம்பந்த சிவாச்சாரியார், இ.வெங்கடேச ஐயர் போன்றோரின் விளக்கங்கள் இணையங்கள் ஊடாக இலகுவாக கிடைக்கக்கூடியனவாக இருந்தன. எனவே, நான் பல சைவ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இந்தப் பிரச்சினையில் தலையிட விரும்பவில்லை" என்ற கருத்தே மேலோங்கியிருந்தது. ஒருசில அமைப்புகள் இரண்டில் ஒருநாளை முன்வைத்தனவே தவிர, அதற்கான காரணத்தை முன்வைக்கவில்லை. இதனாலேயே, பெப்பிரவரி 12ம் நாளை வலியுறுத்தி கட்டுரை வரைய வேண்டியதாயிற்று.

எளியேன் இங்கு வீரகேசரி வாரவெளியீட்டுக்கு இங்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

அதேநேரத்தில்,சைவ ஆகமங்களில் காமிக ஆகமத்தை மட்டும் கருத்தில் கொண்டு பெப்பிரவரி 12ம் நாளில் சிவராத்திரியை பல சைவ ஆலயங்கள் அனுட்டிப்பதால், இந்நாளில் அனுட்டித்தால் பலனில்லை என்று சாத்திரமான கணிப்பீட்டை ஏற்றவர்களை பயமுறுத்துவதில் உடன்பாடில்லை. நாளும் கோளும் சிவனடியாருக்கு தீதில்லை என்பது ஞானக் குழந்தையின் வாக்கு. மேலும் காலனை அழித்து மார்க்கண்டேயரின் காலத்தை மாற்றியவர் காலனுக்கே காலனாகிய எம்பெருமான். அவர் இடப்பாகம் எழுந்தருளியுள்ள அம்மை, அபிராமிப்பட்டருக்காய் அமாவாசையை பௌர்ணமியாக்கி அருள்பாலித்தவள். காலனுக்கு காலனாகிய அமிர்தகடேசுவரத்தில் அமிர்தகடேசுவருடன் இடப்பாகம் கொண்டு இருப்பதால் அமிர்தகடேசுவரியாக உடனாய அம்மைக்கு முடியாதது என்ன உண்டு? எனவே, இங்கு இறை நம்பிக்கையே தலையாயது. சாத்திரமானதோ சௌரமானதோ.......நம்பினோர் கைவிடப் படார்.

வீரகேசரிக்குரிய தொடுப்பு:- வீரகேசரி
http://www.kalaikesari.com/culture/culturenews/results.asp?key_c=16

எம் கடன் பணி செய்து கிடப்பதே

சிவத்தமிழோன்
மேலும் படிக்க...

Thursday, February 4, 2010

சிவராத்திரி விரதம் விரோதி ஆண்டில் ஏன் குழப்பம்? தீர்வுதான் என்ன?

விரதங்களில் தலைசிறந்தது சிவராத்திரி விரதமாகும். முழுமுதற் பொருளை மனம் முழுதும் தியானித்தபடி நோற்கும் விரதமே சிவராத்திரி விரதமாகும்.
"எட்டுணையும் உளத்து அன்பிலரேனும்
உளரேனும் இந்நாள் எம்மை
கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர்
நற்கதி அடைவர்"
என்று வரதபண்டிதரின் சிவராத்திரி புராணத்தில் சிவன் வாக்காக காணப்படுவது சிவராத்திரி விரத மகிமைக்கு தக்க சான்றாகும். உள்ளத்திலே எள்ளளவுக்கேனும் அன்பில்லாதவர்களாயினும் சரி, அன்புடையோராயினும் சரி, சிவராத்திரி விரத நாளில் சிவபெருமானைத் தரிசிப்பவர்,விரதம் இருப்பவர்,பூசை செய்பவர் யாவருக்கும் நற்கதி ஏற்படும் என்ற சிவன் வாக்கையே வரதபண்டிதர் நற்றமிழில் யாத்த சிவராத்திரி புராணத்தில் குறிப்பிடுகின்றார்.

இத்தகு சிறப்புடைய சிவராத்திரி விரதத்தை இம்முறை அனுட்டிப்பதில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. இம்முறை மகாசிவராத்திரி விரதமானது பெப்பிரவரி 12ம் நாள் அன்றா அன்றி மார்ச்சு 13ம் நாள் அன்றா என்பதே அனுட்டிப்பதில் ஏற்பட்டுள்ள பெருங்குழப்பமாகும்.

இங்கு சாத்திரமான அடிப்படையில் நோக்குவதா அல்லது சௌரமான (சூரியனின் பாதை) அடிப்படையில் நோக்குவதா பொருத்தம் என்ற வாதப்பிரதிவாதங்களே சிவராத்திரி நோன்பு பெப்பிரவரி 12ம் நாளா அன்றி மார்ச்சு 13ம் நாளா என்ற குழப்பத்தை உருவாக்கிற்று. இதுவரைகாலும் சாத்திரமான அடிப்படையும் சௌரமான அடிப்படையும் பொருத்தி வந்தமையால் இந்தக் குழப்பமேதும் உருவாகியிருக்கவில்லை.
 ஆந்திரமாநில சித்தூரைச் சேர்ந்த டி.வி ஞானசம்பந்த சிவாச்சாரியார் பெப்பிரவரி 12ம் நாள் அன்றே சிவராத்திரியை அனுட்டிக்க வேண்டும் என தெளிவுபடுத்தியமை தினமலரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதுபோல் யாழ்ப்பாணத்தில் பாரம்பரியமாக வாக்கிய பஞ்சாங்கத்தைக் கணிக்கும் இரகுநாதையர் வழிவந்த இ.வெங்கடேச ஐயரும் வலைப்பூவில் பெப்பிரவரி 12ம் நாளே சிவராத்திரிக்கு உகந்தது என்று விளக்கியுள்ளார்.

டி.வி ஞானசம்பந்த சிவாச்சாரியார் பெப்பிரவரி 12ம் நாளே உகந்தது என்று பின்வருமாறு விளக்கியுள்ளார்.

"இந்தாண்டு, விரோதி என்ற பெயருக்குத் தக்கபடி, பல மாற்றங்கள் உள்ளன. பூணூல் அணியும் சடங்கான உபா கர்மா, முன்னோர்க்கு சடங்கு செய்யும் சிராத்தம், சிவராத்திரி ஆகியவை, அமாவாசை வரும் மாதங்களில் தான் செய்ய வேண்டும்.

கார்த்திகை மாதத்தில் அமாவாசை சிராத்த திதியே வரவில்லை. எனவே, ஐப்பசி 30ம் தேதியே செய்ய வேண்டி இருந்தது. தீபாவளி கொண்டாடும் மாதத்தில் இரண்டு அமாவாசை நேரக் கூடாது என்பதால், இரண்டு அமாவாசை கொண்ட ஐப்பசி மாதத்தை விடுத்து, புரட்டாசியில் கொண்டாடினோம்.
மகா சிவராத்திரி அனுஷ்டிப்பதற்கு தனி விதி உள்ளது. ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி அன்று எந்த நட்சத்திரம் வருகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயர் தான், மாதத்தின் பெயராக அமைகிறது. சம்ஸ்கிருதத்தில், இதற்கான பெயரைப் பார்த்தால், இது தெளிவாகும். இந்தக் கணக்குப்படி, சில நேரங்களில், ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை ஏற்படுகிறது; அதற்கு முந்தைய இரண்டு தினங்களான, த்ரயோதசியும், சதுர்த்தசியும், மாதத்தின் முதல் மற்றும் கடைசி நாட்களில், சம கால அளவில் ஏற்படுகின்றன. அது போன்ற காலங்களில், மாதக் கடைசி நாள் அன்றே, சிவராத்திரி கொண்டாட வேண்டும்.
மாதத்தின் முதலிலோ அல்லது கடைசியிலோ, த்ரயோதசி - சதுர்த்தசி அல்லது சதுர்த்தசி - அமாவாசை வந்தால், எந்த இரவில் சதுர்த்தசி அதிகமாக உள்ளதோ, அன்று தான் மகா சிவராத்திரி கொண்டாட வேண்டும். மகாசிவராத்திரி காலம் என்று அழைக்கப்படுவது, இரவு 9 மணிக்கு மேல், அதிகாலை 3 மணி வரையிலான, ஆறு காலங்கள் தான். ஒரு காலத்திற்கு, ஒன்றரை மணி நேரம் என்ற கணக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள விதிப்படி பார்த்தாலும், கோகுலாஷ்டமியிலிருந்து 184வது நாள், மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற விதிப்படியும், வரும் பிப்., 12ம் தேதி தான், மகா சிவராத்திரி ஏற்படுகிறது என்பதை அறிந்த கொள்ளலாம்.
வரும் மார்ச் 13ம் தேதி, மகாசிவராத்திரி ஏன் கொண்டாடப்படக் கூடாது என்பதற்கான விளக்கமும் உண்டு. அன்றைய தினம், மாசி 29ம் தேதி, சனிக்கிழமை ஏற்படும் சதுர்த்தசி திதியை விட, அடுத்த நாள் ஞாயிறு அன்று, 11 வினாடிகள், சதுர்த்தசி திதி அதிகமாக உள்ளது என்று கூறினாலும், அன்றைய தினம், "மீன சங்க்ரமண தோஷம்' உள்ளது. எனவே, அந்த இரண்டு தேதிகளிலுமே, மகா சிவராத்திரி கொண்டாட முடியாது.
சிவராத்திரி முதல் காலத்தில், த்ரயோதசியும், சதுர்த்தசியும் கலப்பது, உத்தமத்தில் மத்திமம்; இரண்டாம் காலத்தில், திரயோதசி -சதுர்த்தசி, ஆரம்பத்தில் கலப்பது, உத்தமத்தில் அதமம் என ஆகமங்கள் கூறுகின்றன. எனவே, இவ்வாண்டு, தை மாதமே, கோவில் அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கப்படி, 12.2.10 அன்றே, மகாசிவராத்திரி கொண்டாடப்பட வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்."

காமிக ஆகமம், குமார தந்திரம், கந்தபுராணம் என்று சிவராத்திரி பூசைவிதிகளை விரித்துரைக்கும் நூல்கள் மாகமாதத்தில் வருகின்ற தேய்பிறை சதுர்தசி திதி கூடுகின்ற இரவே சிவராத்திரி நோன்புக்கு உகந்தநாள் என்று கூறுகின்றன. இந்த மகாமாதம் என்பது எந்த மாதம் என்பதே இன்று சிவராத்திரி விரதநாளை அனுட்டிப்பதில் ஏற்பட்ட சர்சைகளுக்கு வித்திட்டுள்ளது. சாத்திரமானம் மற்றும் சௌரமானம் (சூரியனின் அடிப்படையில் கணிப்பது) என்று இருபிரிவினருக்குள் இந்த மாகமாதத்தை புரிந்துகொள்வதில் ஏற்பட்டுள்ள சர்சைகளே யாவற்றுக்கும் காரணமாயிற்று.

சௌரமானப்படி மாசிமாதம் கும்பம் எனப்படும். மகாமாதம் என்பது தைக்கும் மாசிக்கும் இடையில் வருவது. அதாவது மகரத்துக்கும்(தைக்கும்) கும்பத்துக்கும்(மாசிக்கும்) இடையில் வருவது. ஆனால் மாசிமாதமே மகாமாதம் என்ற கருத்துப்பிறழ்வு இப்பிரச்சினைகளுக்கு ஏதுவாயிற்று.


மகாமாதத்தின் நடுப்பகுதியில் இருந்து முடிவுவரை கும்பமாதமாகிய மாசியில் அமையும். எனவே இக்காலப்பகுதியிலேயே நாம் சிவராத்திரிக்குரிய சதுர்த்தசி திதி அமைவதால் நாம் சிவராத்திரி மாசிமாதம் வரும்விரதம் என்று மனதில் பதியவைத்துள்ளோம்.
தை முதலாம் திகதி சனவரி 14இல் வரும் என்று கட்டாயம் ஏதுமில்லை.ஆனால் அது பொதுவாக அப்படி அமைவதால் எம்மில்பலர் சனவரி 14 அன்றுதான் தைப் பொங்கல் என்போம். சிலசமயம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சனவரி 14இல் இருந்து குறைந்துகூட வாய்ப்புண்டு. அதுபோல்த்தான் இம்முறை தை 30ம் நாள் அதாவது பெப்பிரவரி 12ம் நாள் சிவராத்திரி விரதம் அமைந்திருப்பதால் "என்ன மாசியில் வரவில்லையே?" என்று குழம்பிவிட்டோம். எனவே மாசியில் வரும்படி மார்ச்சு 13 அன்று திதி அமைவதால் அந்நாளை சிவராத்திரியாக அனுட்டிக்க முனைந்துள்ளோம்.

இங்கு சௌரமானப்படி கணிப்பவர் காமிகம் முதல் கந்தபுராணம் ஈறாய் சிவராத்திரி பூசைவிதிகளை விதந்துரைக்கும் மகாமாதம் மாசிமாதம் என்றே கருதுகின்றனர்.

யாழ்ப்பாணத்து இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்க மரபுவழி கணிப்பாளர் இ.வெங்கடேச ஐயர் மகாமாதம் என்பது " மகர சங்கிராந்திக்குப் (தைப்பொங்கல்) பின் முடிந்த அமாவாசை கழித்த பிரதமை முதலாக, கும்ப சங்கிராந்திக்குப் (கும்ப மாதமாகிய மாசிமாதம்) பின் முடிந்த இறுதியாகவுள்ள காலமே மாகமாசம்" என்று தெளிவுபடுத்துகின்றார். இது சாத்திரமானக் கணிப்புப்படியாகும்.


"விரோதி வருடத்தில் வரும் (2009-2010) மாக மாதமானது தைமாதம் 3ம் திகதி (16.01.2010) சனிக்கிழமை ஆரம்பமாகி மாசி மாதம் 2ம் திகதி (14.02.2010) ஞாயிற்றுக்கிழமை முடிவடைகின்றது. அமைவாசைக்கு முதற்தினம் வரும் சதுர்த்தசியே மஹாசிவராத்திரி எனும் விதிப்படி, விரோதி வருடம் தை மாதம் 30 திகதி (12.02.2010) வெள்ளிக்கிழமையே சிவராத்திரி விரதமாகும்" என்று வெ.வெங்கடேச ஐயர் மேலும் விளக்குகின்றார்.

காமிகம் முதல் கந்தபுராணம் ஈறாய் சிவராத்திரி பூசையை விரித்துரைக்கும் நூல்கள் குறிப்பிடும் மகாமாதம் சௌரமானக் கணிப்பின்படியான கும்பமாதமாகிய மாசிமாதம் அல்ல என்றும் இது பொதுவாக தை-மாசியில் அமையும் சாத்திரமான மாதம் என்றும் இ.வெக்கடேச ஐயர் தனது வலைப்பூவில் விரிவாக விளக்கியுள்ளார்.
எனினும் சாத்திரநூலை நன்குணர்ந்தவர்களே இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருப்பதால், எனது மொழிநடையில் அவரது கருத்துகளை இங்கு பகிருகின்றேன். இங்கு கோட்டுப்படங்களை இணைத்துள்ளேன்.இவை சாத்திரமான மாதங்களையும் சௌரமான மாதங்களையும் (தை,மாசி,பங்குனி......) அடையாளங்கண்டு விளங்கிக் கொள்ள உதவும் என நினைக்கிறேன்.

ஆவணிச் சதுர்த்தி என்று நாம் அனுட்டிக்கும் விநாயகர் சதுர்த்தி சிலசமயம் புரட்டாசியில் அமைகின்றமையையும் புரட்டாசியில் அனுட்டிக்கும் நவராத்திரி சிலசமயம் புரட்டாசி-ஐப்பசியாகிய இருமாதங்களையும் கொண்டதாகவும் அரிதானசமயங்களில் ஐப்பசியில்மட்டுமே நவராத்திரி விரதநாட்கள் அமைவதையும் இ.வெங்கடேச ஐயர் சுட்டி விளக்கியுள்ளார்.


இவ்வாறு மாதங்கள் சிலவேளைகளில் மாறுவது ஏன்? கோட்டுப்படங்களை நன்கு பார்க்க. யாவும் புரியும்.


பாத்திரபத பூர்வபச சதுர்தசியே விநாயகர் சதுர்தசியாகும். பாத்திரபத மாதம் சாத்திரமானப்படியான மாதமாகும். இது ஆவணியையும் புரட்டாதியையும் கொண்டிருக்கும். தைமாதம் எப்படி சனவரியையும் பெப்பிரவரியையும் கொண்டிருக்குமோ அதுபோல்த்தான். எனவே, அமாவாசை ஆவணிமாதத்தின் நடுப்பகுதியில் அதாவது பாத்திரபத மாதத்தின் தொடக்கத்தில் அமையும்போது பூர்பபட்ச சதுர்தசி ஆவணிமாதத்துக்குள்ளேயே வந்து அமையும். ஆனால் சிலசமயம் அமாவாசை ஆவணிமாத இறுதியில் அமையும்போது பூர்வபட்ச சதுர்தசி புரட்டாதி மாதத்தின் ஆரம்பத்தில் அமையும். எனவே நாம் பொதுவாக ஆவணியில் அனுட்டிக்கும் விநாயகர் சதுர்த்தி விரதம் புரட்டாதியில் சிலவேளைகளில் அனுட்டிக்க வேண்டியேற்படுகின்றது.ஆனால் விதிப்படி எப்பிழையும் இல்லை.காரணம் பாத்திரபத மாதத்திலேயே நாம் விநாயகர்சதுர்தியை அனுட்டிக்கிறோம்.இவ்வாறுதான் இம்முறை சிவராத்திரிக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படம் மூலம் சாத்திரமானப்படியான மாத அமைப்பு எப்படி ஆவணி-புரட்டாசியை உள்ளடக்கிறது என்பதையும் ஏன் சிலசமயம் விநாயகர் சதுர்ததி புரட்டாதியில் வருகின்றது என்பதையும் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.




மேற்சொன்ன கோட்டுப்படம் மூலம் விளங்கியிருக்குமானால் இனி சிவராத்திரி நாளை இலகுவாக உணர்ந்துகொள்வீர்.


காமிக ஆகமம் தொட்டு கந்தபுராணம்வரை கூறப்படுகின்ற மகாமாதம் தைமாதத்தின் கடைப்பகுதியையும் மாசிமாதத்தின் நடுப்பகுதிவரையாக காலத்தையும் கொண்டது. அமாவாசைக்கு முன்கூடுகின்ற சதுர்தசியே விரதநாள் ஆகும்.எனவே, அமாவாசையானது மகாமாதத்தின் இறுதிப்பகுதியில் வரும்போது அது மாசிமாதத்துள் அமைகின்றது.எனவே, மாசிமாததினுள்ளே நாம் சிவராத்திரி விரதநாளை அனுட்டிக்கின்றோம். இது வழமையாக நடைபெறும். ஆனால் இம்முறை மகாமாத முதற்பகுதியில் அமாவாசை வருவதால் சிவராத்திரி விரதம் தைமாதம் அனுட்டிக்க வேண்டியதாகிறது. தையின் இறுதிக்காலமும் மாசியின் நடுக்காலம் வரையும் மகாமாதத்துள் அமைவதால் ஆகமவிதிப்படி பிழை எதுவும் இங்கு இல்லை.

ஆனால் மாசியின் இறுதிப்பகுதியில்(30ம் நாள்) வரும் (ஆங்கிலத்திற்கு மார்ச்சு 13) சிவராத்திரி நாளோ அன்றி அதற்கு ஆதரமான அமாவாசையோ மகாமாதத்துள் வரவில்லை.அது மகாமாதத்துக்கு அடுத்த மாதத்தை சேர்ந்ததாகிவிட்டது. இங்கு சௌரமான அடிப்படையில் கணிப்போர் மகாமாதம் என்று ஆகமம் சொல்வது மாசியே என்று வாதிடுகின்றனர்.அப்படியானால் விநாயகர் சதுர்த்தி விரதம் (பாத்திரபத மாதம்), நவராத்திரி விரதம் (ஆஸ்வீஜ மாதம்) என்பனவற்றுக்கு சாத்திரநூல்கள் கூறும் மாதங்கள் சாத்திரமானமாதங்கள் என்று ஏற்றுக் கொண்டவர்கள் ஏன் சிவராத்திரிக்குமட்டும் மகாமாதம் என்பது மாசியென்று பிடிவாதம் பிடிக்கின்றனரோ?

மாசிக்கு கும்பம் என்று சௌரமானத்தின்படி தனிப்பெயர் இருக்க, ஆகமங்கள் மகாமதம் என்று சுட்டுவதால் மகாமதம் ஒருக்காலும் மாசியாகாது. அது தையையும் மாசியையும் கொண்ட சாத்திரமான மாதம் என்பது வெள்ளிடைமலை.
இலங்கையில் இருந்து எழுதுபவர் ஒருவர் இரகுநாதையர் வழிவந்தோர் இப்போது பலவருடங்களாக கணிப்பதில் பிழைவிடுகின்றனர் என்று காரசாரமாக எழுதியுள்ளார். அவரது கருத்துகளை மதித்தே ஆகவேண்டும். அவர் பிழைகளை சுட்டி சைவசமூகத்துக்கு பணியாற்றிவரும் அன்பர். அதுபோல் பிழைகள் நேரும்போது அவற்றைத் திருத்தவேண்டியது கடமையாகும்.நக்கீரர் நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றது சும்மாவா என்ன? ஆனால் தமிழகத்து வாக்கியக் கணிபாளர்கள் இரகுநாதையர் வழிவந்தோரிடம் கேட்டா கணிப்பவர்கள்? அவர்களும் இம்முறை பெப்பிரவரி 12ம் நாள் என்றே கணித்துள்ளனர். பிழைவிட்டார்கள் என்ற மந்திரத்தினூடாக சரியைப் பிழையாகக் காட்டக்கூடாது.



சிதம்பரம்,திருவண்ணாமலை போன்ற சிவாலயங்கள் வழியே சரி என்ற வாதமும் ஏற்புடையதல்ல.நாவலர் பெருமான் சிதம்பர அந்தணர்கள் ஆகமவழி நிற்காமையை கண்டித்திருக்கிறார். எனவே அவர்வழி வந்த ஈழவள நாட்டில் சிதம்பரம் செய்தால் சரி என்ற கொள்கை அபத்தம்!!!  சிதம்பரத்தில் ஓதுவாருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்தை அடிப்படையாகக் கொண்டு நாமும் அவமானப்படுத்தலாமா என்ன? நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றது இங்கும் பொருந்தும்!

"தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே "என்று அப்பரடிகள் சிவபெருமானைப் துதித்துப்பாடுகின்றார். எனவே, சாத்திரமான அடிப்படையில் கணிக்கப்படும் கணிப்பை ஆதரிப்பதே சைவப் பெருமக்களுக்கு அழகுடையதாகும்.


மார்க்கண்டேயருக்கு விதிக்கப்பட்டிருந்த 16 வயது என்னும் காலக் கெடுவிலிருந்து காலனை உதைத்து காலனுக்கே காலனாகி மார்க்கண்டேயரைக் காத்தவர் எம்பெருமான். தை அமாவாசையை சுப்பிரமணிய பட்டராகிய அபிராமிப் பட்டருக்காக தனது காதிலிருந்த தோடகத்தை கழற்றி வானில்வீசி பௌர்ணமியாக்கிய அன்னை அபிராமியை இடப்பாக்கம் கொண்டவரே காலனுக்கு காலனாய் திருக்கடவூரில் அமிர்த்தகடேசுவராக எழுந்தருளியுள்ள எம் நாதன்.நாளும் கோளும் சிவனடியாருக்கு தீங்காக என்ற ஞானசம்பந்தக் குழந்தையின் அருள்வாக்கை மனதில் நிறுத்தின் நாளும் கோளும் சிவராத்திரி விரதக் கணிப்பில் ஏற்படுத்தும் சிக்கல்களை ஆராய்ந்து துயருரத்தேவையில்லை என்பது புலனாகும்.



எனவே, சைவப் பெருமக்களே, உங்களுக்கு அருகாமையில் உள்ள சைவாகம முறைக்கமைந்த சைவ ஆலயங்களில் சிவராத்திரி விரதநாள் அனுட்டிக்கப்படும்வேளை, நீங்கள் முழுமனதுடன் சிவராத்திரி விரதத்தை அனுட்டிக்க. பலன் முழுமையாய் உண்டு. உங்கள் மனதுக்கு ஈர்ப்புடைய சைவாகம ஆலயங்களில் சிவராத்திரி கடைப்பிடிக்கப்படும் நன்னாளில் மனதை சிவன்பால் செலுத்தி சிவராத்திரி நோன்பை நோற்குக. இங்கு, சிவராத்திரி விரதநாள் என்ற நம்பிக்கையுடன் மனதை சிவபெருமானின் திருவடிகளுடன் ஒன்றியிருக்கச் செய்வதுவே அடியார்கள் செய்யவேண்டிய கடமையாகும்.
மார்க்கண்டேயருக்கு காலனை அழித்து காலத்தை மாற்றியவர் அமிர்த்தகடேசுவராகிய திருக்கடவூர் எம்பெருமான். அதுபோல் அமாவாசையைப் பௌர்ணமியாக்கி அபிராமிப்பட்டரைக் காத்தருளிய தாய் அமிர்த்தகடேசுவரருடனாய அபிராமியம்மை.
எனவே, இறை நம்பிக்கையே முதலாவதும் அடிப்படையானதுமாகும்.  காலமும் நேரமும் இரண்டாம் பட்சம். சிவராத்திரி காலம் எவ்வளவு மகிமையுடையது என்பதை பல்வேறுகதைகளினூடாக எடுத்துக்கூறப்பட்டிருப்பினும், பூரணமான அன்புமிகுந்த பக்தி காலத்தையே மாற்றி இறையருளை ஊட்டும் என்பதை அபிராமிப்பட்டர் மற்றும் மார்க்கண்டேயர் கதைகளிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க...

Tuesday, February 2, 2010

உலக சைவ மாநாடு-சைவத்தமிழுக்கு கிடைத்த பேறு!

பன்னிரண்டாம் உலக சைவ மாநாடு எல்லாம் வல்ல சிவனருளால் நடைபெறவுள்ளது. மாநாட்டு நிகழ்வுகள் மாநாட்டு வலைப்பூவில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சைவத் தமிழ் ஆர்வலர்கள் மாநாட்டு நிகழ்ச்சி நிரல்களை குறித்த வலைப்பூவிற்கு சென்று அறிந்து பயனடையும்வகையில் பதிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள சைவப் பெருமக்கள் இந்நிகழ்வுகளில் கலந்து சைவசமயம் பற்றிய பல்வேறு அரியவிடயங்களை அறிந்து பயனடைய இதுவொரு நல்ல பேறு என்றே பன்னிரண்டாவது சைவ மாநாட்டை சிறப்பிக்கலாம்.

அன்புள்ள பெற்றோர்களே,

உங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மாநாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றுவீர்! ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்றொரு பழமொழி உண்டு.சிறுவயதில் சைவப் பண்பாட்டைப் போதிப்பது நெறியான வாழ்வை உங்கள் பிள்ளைகள் நுகர ஏதுவாக்கும் பிரதான காரணியாகும். எனவே மாநாட்டு நிகழ்வுகள் நடைபெறும் தில்லைமாநகரத்து மக்களும் அதற்கு அருகாமையில் உள்ள மக்களும் கலந்துகொள்வதற்கு சிரமங்கள் மிகச்சொற்பமாதலால், அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்! வெளிநாடுகளில் இருந்தெல்லாம் அறிஞர்குழாம் கூடுகின்ற இம்மாநாட்டில் கலந்துகொண்டு பயனடைவீராக!

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

என்ற ஔவையின் மூதுரையை மனதில் இருத்தின், அறிஞரைக் காண்பதுவும் அறிஞர்குழாத்தின் சொல்லைக் கேட்பதுவும் அறிஞர்குழாத்தின் பெருமைகளைப் பேசுவதும் அறிஞர்குழாத்துடன் கூடி வாழ்வதும் நன்மையை ஊட்டும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். எனவே, சைவ அறிஞர்குழாம் கூடுகின்ற இம்மாநாட்டில் பங்குபற்றுவது அருமையிலும் அருமையான அனுபவத்தை அளிக்கும் என்பது திண்ணம்!!!

இங்கே சொடுக்குவதன் மூலம் மாநாட்டு வலைப்பூவை சென்றடைந்து பயனடையலாம்.
உலக சைவ மாநாட்டு வலைப்பூ


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நன்றி
"எம் கடன் பணி செய்து கிடப்பதே"
சிவத்தமிழோன்
மேலும் படிக்க...