"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"

Saturday, November 22, 2008

சைவ நெறியை அழிக்கத்துடிக்கும் இந்துவை போற்றுதல் வெட்கக்கேடானது தமிழுக்கும் தமிழருக்கும்

இந்து மதத்தை ஒர் தனித்துவமான மதமாக கருத முடியாது எனவும், பௌத்தம் மற்றும் வைதீக மதத்தின் கலவையே இந்து மதம் எனவும் ,ஏனைய மதங்களைப் போன்று இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு இல்லை எனவும் இந்து மதத்தை ஓர் கஞ்சியாகவே கருத வேண்டும்" என்ற ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரரின் கருத்தினால் "கொக்குவில் இந்து" எனும் அன்பர் என்று "இந்துக்களின்" கருத்தைக் கேட்டு அவரது facebookதளத்தில் சிறுகுறிப்புப் பகுதியில்(note) குறிப்பிட்டு எழுதியிருந்தார்.


அன்பர் தமிழ் சமூகத்தில் கொண்டுள்ள தீராத பற்றால் எளியேன் கவரப்பட்டிருந்ததால் உருவான அன்புப் பிணைப்பும் எளியேனின் நண்பராதலால் ஏற்பட்ட உரிமையோடும் சைவப் பிரசையாதாலால் எளியேனுக்கு விதிக்கப்பட்ட கடமையின் நிமித்தமும் அன்பருடைய சிறுகுறிப்பில் பல துண்டுகளாக எளியேன் எழுதிய பின்னூட்டங்களைத் தொகுத்து சிறு திருத்தங்களோடு இங்கு பிரசுரம் செய்கின்றேன். அன்பர் என்னிடம் இதுபற்றி முழுமையாக விபரித்து எழுதும்படி வேண்டினார். எனினும் பல்கலைக்கழக கல்விச்சுமை எளியேனை வாட்டி வதைப்பதால் எழுதுவதற்கு போதிய அவகாசம் இன்னும் கிட்டவில்லை. எனவே அன்பரின் சிறுகுறிப்புப் பகுதியில் எழுதியவற்றையே தொகுத்து இங்கு பிரசுரம் செய்ய வேண்டியதாயிற்று.


இந்துவைப் பற்றி சிகல உறுமய சொன்னதில் என்ன தவறு?
கலைஞர் கருணாநிதி( தமிழரின் சொத்தான சைவம் இந்து எனும் ஆரியத்தால் அபகரிக்கப்படுவது தெரியாத நாத்தீக வித்தகர். இந்துவை எதிர்க்கிறேன் சைவத்தை மறந்த அரசியல் மேதை) மட்டுமல்ல சைவ புலவர்கள் சைவ ஆதீனங்கள் எல்லாமே அதைத்தானே சொல்லுகின்றனர்.

சிங்கள சிறீயைத் தமிழன் எதிர்ப்பது நியாயம் ஆனால் ஆரிய இந்துவை தமிழன் ஏற்பது முறை! என்ன நியாயம் இது?

சைவ சமயமே சமயம் எனறார் தாயுமான சுவாமிகள். மேன்மைகொள் சைவநீதி என்றார் கச்சியப்ப சிவாச்சாரியார். சைவ சமயமாம் சமயஞ் சாரும் ஊழ்பெறல் அரிது என்றார் அருணந்தி சிவாச்சாரியார். சைவத்திற் மேற்சமயம் வேறில்லை என்றார் சைவ எல்லப்ப நாவலர்.சைவம் சிவனுடன் சம்பந்தமானது என்றார் திருமூலர். எங்கள் சமயம் சைவம் என்பதில் என்ன கூச்சம்? இந்து என்பதில் எனன பெருமை உண்டு? இந்து எனப்து தமிழரின் சிறுமை. திருகோணமலை என்ற அழகான பெயரை டிரிங்கோமல என்பது அழகாகுமா? தமிழ் வாழப் போராட்டம் தமிழ் வரலாறு வாழப் போராட்டம் என்று நம் முன்னோர்கள் விட்டதவறால் நாம் இன்று தவிப்பது அதுபோல்த்தான் இன்று இந்துவுக்கு அனுமதி அளித்தால் நாளை சைவத்துக்காய் போராடவேண்டி இருக்கும்.

இந்து எனப்து ஆரியம் சைவத்தை அழிக்க உருவாக்கிய கலப்படச் சமயம். அப்படியே சங்கராச்சாரியாரின் சுமார்த்த மதத்தை copyபண்ணி உருவாக்கப்பட்ட மதம். அங்கு சைவத்திற்கு வேலையேயில்லை. சுவாமி விவேகானாந்தர் அமெரிக்கா மாநாட்டில் இந்து என்ற பெயரை பயன்படுத்தியதால் ஏற்பட்டவிளைவுதான் இந்துவும் இந்துவோடு கூடி சுமார்த்தமும் பிரபல்யமடைய ஏதுவாயிற்று.

சுவாமி விவேகானந்தர் இலங்கை வந்திருந்தவேளை அவரை மகிழ்விக்கும் பொருட்டு அடிக்கடி இந்து என்ற சொல்லை பலர்பயன்படுத்தியபோது இலங்கையின் சைவச் சிறப்புத் தன்மையை கண்டு "இந்து என்ற பெயருக்குப்பதில் சைவன் என்றே கூறவேண்டும்" (உதயன் 07.09.98)என்று சுவாமிகள் கூறியது எப்படி மறந்துபோனது சில புத்திஜிவிகளுக்கு?

சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் கப்பலில் பயணம் செய்தபோது அவரைச் சந்தித்த அமெரிக்கர் "தாங்கள் இந்துவா?" என்று கேட்டதற்கு சிரித்துவிட்டு, நாங்கள் சிவனை வழிபடுபவர்கள் .நாங்கள் சைவர்கள்" என்று மறுத்துக்கூறியிருந்தார். திருமதி லீலாவதி இராமநாதன் எழுதிய நூலில் இன்றும் சாட்சியாய் அவர் கருத்து பதியப்பட்டுள்ளது. அன்று விவேகானந்தர் ஈட்டிய வெற்றிவாகையை கொண்டாடும் காலகட்டத்தில் மலர்ந்த கல்லூரிகளும் பத்திரிக்கைகளும் இந்து என்ற பெயரைத் தாங்கத் தொடங்கின. ஆனால் அவை இம்மியளவும் இந்து என்ற பெயர்மூலம் ஆரியச் சதிக்கு இடமளிக்கவில்லை.

ஆனால் இன்று? அஞ்சனேயர் வழிபாடு. சாயி வழிபாடு, கல்கி வழிபாடு, கண்டபாட்டுக்கு தேரோட்டம் அப்பப்பா எத்தனை கலவைகள்! இக்கலவைச் சமயத்தால்த்தான் தமிழ்நாட்டில் நாத்தீகம் உருவானது. கலைஞர் கருணாநிதிகூட இதே கேள்வியைக் கேட்டதோடு இந்து என்றால் கள்ளர் என்றும் கூறியிருந்தார். சிந்து பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களிடம்(திராவிடர் எனப்து ஆராய்சித்துணிபு) வெறுப்புக்கொண்ட பாரசீகர் கிந்து என்றால் கள்ளர் என்று பொருள் கொண்டனர். ஆங்கிலேயர் இந்தியா என்று பெயர் சூட்டியதும் ஆரியர் இந்தியாவில் தோன்றிய சமயங்களை இணைத்து ஆரிய சமயத்தை வளர்க்க சுமார்த்த மதத்தை தெரிவு செய்தனர்.( சங்கராச் சாரியாரால் உருவாக்கப்பட்டது. சிவன் முழுமுதற்கடவுள் அல்ல. பிரம்மம் தான் கடவுள் என்ற கொள்கை. பிரம்மம் சிவனாகவும் விஷ்ணுவாகவும் சக்தியாகவும் தோற்றம் கொள்ளும்)

ஆனால் சுமார்த்தத்தை தமிழர் ஏலவே நிராகரித்துவிட்டதால் அதற்கு புதுப்பெயர் கொடுக்கவிரும்பி இந்து என்ற பாரசீகரின் சொல்லை இட்டனர்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்து மதம் என்பது பௌத்தம் சமணம் சீக்கியம் உள்ளடக்கியதாகும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அகில இலங்கை இந்து மாமன்றம் என்பது இலங்கையில் பௌத்தத்திற்கும் உடமையான மன்றமா? சீக்கியமும் சமணமும் இலங்கையில் உண்டா?

சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார் இந்து என்பது எம்மொழிச் சொல் என்று வாதிட்டு ஆய்வு நடாத்தி அது தமிழுக்கு விரோதமான தமிழ் பண்பாட்டிற்கு விரோதமான தமிழர் சமயமான சைவத்தை அழித்து ஆரிய வைதீக சமயத்தை வளர்க்கும் பொருட்டு ஆரியச் சதியால் உருவாக்கப்பட்ட ஒரு சொல் என இனங்கண்டு நிராகரித்து யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து வாலிபர் சங்கத்திற்கு எடுத்துவிளக்கி அதன்பெயரை சைவ வாலிபர் மன்றம் என்று 1956களில் மாற்றி புரட்சி செய்ததை இன்று இந்து மாமன்றம்............. இந்துக் கல்லூரி.............( அடியேனும் ஓர் இந்துக் கல்லூரியில்த்தான் கற்றவன்) கொழும்பில் உள்ள இந்து குருமார் பீடம்(யார் தமிழின் மேன்மைகாக்க மாற்றினாலும் இவர்கள் இந்து என்ற ஆரியச் சதியை விட்டுக் கொடுக்க்க மாட்டார்கள். ஏனெனில் இவர்கள்தான் ஆரியச் சதியின் இலங்கை ஏஐண்டுகள்) இப்படிப்பல சிவபாத சுந்தரனாருக்கும் தமிழருக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் கேட்டை விளைவிக்கின்றனர்.(தெரிந்தும் தெரியாமலும்)

தேவாரங்கள் திருவாசகம் பெரியபுராணம் கந்தபுராணம் திருவிளையாடற் புராணம் சைவ ஆகமங்கள் திருமந்திரம் சைவ சித்தாந்த நூற்கள் எவற்றிலுமே இந்து என்னும் பெயர் சமயத்தின் பெயரைத் தாங்கி வந்ததில்லை. தமிழ் அகராதியைப் புரட்டிப்பார்த்தால் தெரியும் இந்து என்றால் சந்திரன் என்று பொருள் வழங்கி சிரிக்கும்.
சைவம் என்பது தொன்று தொட்டு சிவனோடு சம்பந்தமானது எனும் பொருளில் விளங்கிவருவது. சுத்தத் தமிழ்ப் பெயர். சிங்கள சிறிக்கு எதிராகப் போராடிய எம்மவ்ர்கள் ஆரிய சதிக்கு வரவழைக்கப்பட்ட பாரசீகச் சொல்லான இந்துவை முத்தமிடுவது வெட்கக் கேடானது!

"சிவனெனும் ஓசை யல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை உனதே" என்கிறார் அப்பரடிகள்.சிவன் என்னும் ஓசைக்கல்லது மற்றெவ்வோசைக்காயினும் திருநின்ற செம்மையுள்ளதா? சபதம் பிடிக்கவா? எனப்து அதன் பொருள்.
சட்டத்தரணிகள் எமது சமயத்தை தலைமைதாங்கும் இக்காலத்தில் அவர்களுக்கு அப்பரடிகள் பாடிய இப்பாடலின் பொருள் எப்படித் தெரியவரும்? சிவன் எனும் ஓசையோடு கூடியது சைவம் என்பதை சொல்லத்தான் வேண்டுமா?.

இந்து என்ற கலப்பட ஆரியச் சதியைத் தூக்கி எறிந்துவிட்டு தமிழர் சமயமான சைவத்தை வளர்ப்போம்.

மொழியபிமானமும் சமயபிமானமும் இல்லாதவர் வாழ்வும் வாழ்வா என்று வினாவினார் தாமோதரம்பிள்ளையார். மொழியோடு சமயமும் சமயத்தோடு மொழியுமாக இரண்டறக்கலந்து விளங்குவது சைவமும் தமிழும்.
தமிழராகிய நாங்கள் பண்டைய காலந்தொட்டு சைவத்தை அழித்து சுமார்த்தத்தை பரப்பத்துடிக்கும் ஆரியச் சதியை எப்படியெல்லாம் வென்று வந்தோமோ அந்த வரலாறுகளை மறக்காது எமது இளைய சமுதாயத்தை ஆரியத்திடம் கொடுத்து ஏமாந்து தமிழால் சபிக்கப்படாது விழிப்புக் கொள்வோம்.

பிற்குறிப்பு:- facebookகுழுமங்கள் தொட்டு பல்வேறுபட்ட இணையத்தளங்கள்வரை எளியேன் வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரி மாணவிகள் தமது கல்லூரி பெயரை வலிய இந்து மகளீர் கல்லூரி என்று எழுதுவது காணும்போது கண்களில் குருதிவழிகிறது. கொழும்பில் சைவம் எனும் பெயரோடு இருக்கும் ஓரே ஒரு கல்லூரி சைவ மங்கையர் கல்லூரி. குறித்த கல்லூரி மாணவிகள் இந்து எனும் சொல்லில் மயங்கி கல்லூரி பெயரையே மாற்றியமை வருந்தவைக்கின்றது. சைவம் என்பதன் ஆங்கிலப்பதம் saivismஆதலால் colombo saivism ladies college என்பதே சரியானது.
சைவம் என்ற நல்ல தமிழ் சொல்லை இழந்து இந்து என்ற ஆரிய சதி சொல்லுக்கும் அதனோடு கூடி மறைந்திருக்கின்ற தமிழ்விரோத சதித்திட்டங்களுக்கும் சைவர்களே தமிழர்களே இரையாகிப் போகாதீர்.


பிற்குறிப்பு:-facebookஇல் தமக்கென profileவைத்திருப்பவர்களுக்கும் ஏனைய இணையத்தளத்தில் சமயப் பெயராக இந்து என்று தவறுதலாக பயன்படுத்தும் சைவப் பெருமக்களுக்கும் எளியேன் அன்போடு வேண்டுவது சைவம்/சைவன் saivism/saivite என்று மாற்றி இந்து என்ற ஆரிய தமிழ் விரோத ஆரியச் சதியை தோற்கடிக்க விழிப்புணர்வு கொள்வோம். ////சிறுதுளி பெரு வெள்ளம்//////

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
மேலும் படிக்க...

Tuesday, November 4, 2008

தமிழன் கண்ட முருகன்

எம்.கே.ஈழவேந்தன் ஐயா கந்த சட்டி விரதத்தை முன்னிட்டு எழுதிய "தமிழன் கண்ட முருகன்" எனும் கட்டுரையினை தினக்குரலில் இணையத்தளத்தில் சுவைக்கும் பேறுபெற்றேன். அடியேன் சுவைத்த ஐயாவின் தமிழ்த்தேன் ஒழுகும் குறித்த கட்டுரைக்கு இங்கு இணைப்புக் கொடுக்கின்றேன்.

ஐயாவினது கட்டுரையைப் படித்து சுவைக்க அழுத்துங்கள்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
நன்றி
மேலும் படிக்க...